கோலாலம்பூர், பிப். 10-
இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மலேசிய ரசிகர் மன்றமான மலேசிய ரஹ்மானியா ரசிகர் மன்றத்தின் ஏற்பாட்டில் பொளலிங் போட்டி இன்று நடைபெற்றது. இதில், 838 புள்ளிகள் பெற்று ராமோன் என் பிரன்ட்ஸ் குழு வெற்றி வாகையை சூடியது.
ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற நோக்கில் இரண்டாவது முறையாக இந்த பௌலிங் போட்டியை சுபாங் சன்வே பிரமிட்டில் மதியம் 2.00 மணி தொடங்கி 5.00 மணி வரையில் நடத்தியது. இதில் 5 பேர் அடங்கிய 48 குழுக்கள் கலந்து கொண்டன. முதலிடத்தை ராமோன் என் பிரன்ட்ஸ் குழு வென்ற வேளையில் சாகார் ஸ்பிரிட் குழு 2ஆவது இடத்தையும் ஸ்மால் ஸ்பிரிட் மூன்றாவது இடத்தையும் தட்டிச் சென்றன. வெற்றிப்பெற்ற குழுக்களுக்கு பிரபல தொழிலதிபர் டத்தோ ஜி.ஞானராஜா பரிசுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சி குறித்து மலேசிய ரஹ்மானியா ரசிகர் மன்றத்தின் தலைவர் ரசாலி யூசோப் கூறுகையில், மலேசியாவிலுள்ள ரஹ்மானின் ரசிகர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் பல்வேறு நிகழ்ச்சிகளை இந்த மன்றம் நடத்தி வருகின்றது. அதில், இந்த பௌலிங் போட்டியும் அடங்கும். கடந்தாண்டு இந்த போட்டிக்கு கிடைத்த பலத்தை ஆதரவைத் தொடர்ந்து இம்முறையும் ஏற்பாடு செய்ததாக அவர் தெரிவித்தார்.
இந்த பௌலிங் போட்டிக்கு டிஎஸ்ஜி நிறுவனம், பிளக் ஹோர்ஸ் மூவிஸ் நிறுவனம் உட்பட பல நிறுவனங்கள் ஆதரவு வழங்கியுள்ளன. அதே வேளையில், இந்தப் போட்டிக்கு விளையாட்டாளர்களும் தங்களது ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கியிருப்பது எங்களது மனநிறைவை அளிக்கிறது. இது போன்ற போட்டிகளை தொடர்ந்தாற்போல் நடத்த திட்டமிட்டிருப்பதாக பௌலிங் போட்டியின் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறினார்.
மன்றத்தின் மூலம் நாங்கள் இது போன்ற போட்டிகள் மட்டுமின்ற அவ்வப்போது ஆதரவற்ற மற்றும் முதியோர் இல்லங்களுக்கும் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம். மற்றவர்களையும் போன்று அவர்களுக்கு அனைத்து உதவிகளும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கில் இந்த உதவிகள் செய்யப்படுகின்றது.
இதனிடையே, மலேசிய ரஹ்மானியா ரசிகர் மன்றத்தின் ஏற்பாட்டில் எஸ்.பி.பாலாவின் நேரடி கலை நிகழ்ச்சி எதிர்வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதியும் மோஜோ கலை நிகழ்ச்சி ஜூலை 7ஆம் தேதியும் நடைபெறவுள்ளதாக ரசாலி யூசோப் சொன்னார்.







