Homeஅரசியல்ஏர் ஆசியா டோனி பெர்ணாண்டஸ் மீது மேவ்கோம் ஆணையம் போலீஸ் புகார்!

ஏர் ஆசியா டோனி பெர்ணாண்டஸ் மீது மேவ்கோம் ஆணையம் போலீஸ் புகார்!

கோலாலம்பூர், மே 15-

கடந்த 14ஆவது பொதுத்தேர்தலில் மலேசியர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக சலுகை விலையில் 120 கூடுதல் விமான பயணங்களை ஏர் ஆசியா அறிவித்த போது அதனை ரத்து செய்யும்படி மலேசிய வான்போக்குவரத்து ஆணையம் (மேவ்கோம்) கட்டாயப்படுத்தியதாக ஏர் ஆசியா குழுமத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டோனி பெர்ணாண்டஸ் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், டோனியின் குற்றச்சாட்டிற்கு எதிராக அந்த ஆணையம் போலீசில் புகார் அளித்தது. இது குறித்து மேவ்கோம் ஆணையம் கூறுகையில், ஏர் ஆசியா நிறுவனம் கேட்டுக்கொண்ட கூடுதல் பயணங்களில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி 66 பயணங்கள் வரையில் அனுமதியை வழங்கியதாக தெரிவித்தது.

பொதுத்தேர்தலை முன்னிட்டு ஏர் ஆசியா கேட்டிருந்த கூடுதல் 120 பயணங்களுக்கான அனுமதியை மேவ்கோம் ரத்து செய்வதாக கூறியதாக அந்நிறுவனம் கூறிய குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கின்றோம். கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஏர் ஆசியா கேட்டிருந்த 66 விமான பயணங்களுக்கு அனுமதியை வழங்கினோம்.

கண்காணிப்பு தேவையை நிறைவு செய்திருக்கும் ஏர் ஆசியா அல்லது எந்தவொரு விமான நிறுவனமும் தங்களது விமான சேவைகளை குறைக்க வேண்டும் என்றோ அல்லது ரத்து செய்ய வேண்டும் என்றோ கூறி நாங்கள் எந்த உத்தரவுகளையும் வெளியிடவில்லை. இது குறித்து, டோனி பெர்ணாண்டஸ் வெளியிட்ட ஒரு காணொளியில் கூறியிருப்பதை நாங்கள் கடுமையாக கருதுகிறோம். இது குறித்து போலீசிலும் புகார் அளித்துள்ளோம் என அந்த ஆணையம் தெரிவித்தது.

முன்னராக, முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு ஆதரவு தெரிவித்ததற்காகவும் தேசிய முன்னணியின் தேர்தல் சுலோகம் மற்றும் சின்னத்தை ஏர் ஆசியா விமானத்தில் இடம்பெற செய்ததற்காக டோனி பெர்ணாண்டஸை பலர் சமூகவலைத்தளங்களில் கடுமையாக சாடினர்.

இது தொடர்பில் காணொளி வாயிலாக, விளக்கம் அளித்த டோனி பெர்ணாண்டஸ் தாம் அவ்வாறு செய்வதற்கு நஜீப் தலைமையிலான அரசாங்கம் வழங்கிய அழுத்தமே காரணம் என்றும் பொதுத்தேர்தலுக்காக ஏர் ஆசியா அறிவித்த கூடுதல் பயணங்களை ரத்து செய்வதற்கும் டான்ஸ்ரீ ரபிடாவை ஏர் ஆசியா எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கும் தமக்கு அழுத்தம் அளிக்கப்பட்டதாக டோனி பெர்ணாண்டஸ் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், அவருக்கு எதிராக மேவ்கோம் ஆணையம் இந்த போலீஸ் புகாரை அளித்துள்ளது.

spot_img

latest articles

explore more