கோலாலம்பூர், செப்.1
தானாகச் சரணடையும் திட்டம் முடிவடைந்ததிலிருந்து இதுவரை 500க்கும் மேற்பட்ட சட்டவிரோதக் குடியேறிகள் கைது செய்யப்பட்டிருப்பதாகக் குடிநுழைவுத் துறைத் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ முஸ்தபார் அலி தெரிவித்தார்.
இந்தச் சோதனை நடவடிக்கையில் நாடு முழுவதும் அந்நிய நாட்டினர்கள் 5,000 பேரைச் சோதனைக்கு உட்படுத்தியதில் 500க்கும் மேற்பட்ட சட்டவிரோதக் குடியேறிகள் கைது செய்யப்பட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.
இத்திட்டம் முடிவுற்றதும் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றியது தொடர்பில் நாங்கள் மன நிறைவு கொண்டோம். இனி இத்திட்டத்தில் கால நீட்டிப்பு இல்லை என்று இங்குள்ள கையுறைத் தயாரிப்புத் தொழிற்சாலையில் 3ஆவது ஒப்ஸ் மெகா நடவடிக்கை முடிவுற்ற பின்னர் செய்தியாளர்களிடம் முஸ்தபார் அலி தெரிவித்தார்.
இந்தச் சோதனை நடவடிக்கை உண்மையில் கடந்த 31ஆம் தேதி நள்ளிரவு 12.00 மணிக்கு தொடங்கப்பட்டது. இந்நடவடிக்கை வெற்றி பெறும் வகையில் நாடு முழுவதும் அமலாக்க அதிகாரிகளைக் குடிநுழைவுத் துறை பணியில் அமர்த்தியது என்று அவர் மேலும் கூறினார்.


