கோலாலம்பூர், செப்.6-
2020 ஆம் ஆண்டில் மலேசியா வளர்ச்சி அடைந்த நாடு என்ற தகுதியை நிச்சயம் பெற முடியாது என பெருமக்கள் மன்றத்தின் தலைவர் துன் டாயிம் சைனுடின் தெரிவித்துள்ளார். நாட்டில் இன்னும் அதிகமானோர் வறுமையில் வாடுவதால் நிச்சயம் அந்த தகுதியை எட்டுவது கடினம் என டாயிம் தெரிவித்தார்.
ஒரே மலேசியா உதவித் தொகைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 70 லட்சமாக இருக்கும் பட்சத்தில் வளர்ச்சி அடைந்த நாடு என்ற தகுதியை எவ்வாறு அடைய முடியும் என டிவி 3 தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளியேறிய மக்கள் பிரச்சினைகள் நிகழ்ச்சியில் துன் டாயிம் கேள்வி எழுப்பினார்.
எனினும் வளர்ச்சி அடைந்த நாடு என்ற தகுதியைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் தற்போது முடுக்கி விடப்பட்டால் நிச்சயம் அதனை அடைய முடியும் என்று டாயிம் கூறினார். இன்னும் இரண்டு ஆண்டுகளில் அரசாங்கத்தில் நடந்த பல்வேறு முறைக்கேடுகள் சரி செய்யப்படும் என துன் டாக்டர் மகாதீர் வாக்குறுதி அளித்துள்ளார்.
அதன் பின்னர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக பதவியேற்றப் பின்னர் வளர்ச்சி அடைந்த நாட்டிற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என தாம் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.


