கோலாலம்பூர், டிச.26 –
திரெங்கானு எப்.சி அணியில் இடம்பெற்றிருக்கும் கலப்பின ஆட்டக்காரர் லீ டக் தேசிய கால்பந்து அணி, ஹரிமாவ் மலாயாவில் இடம்பெறுவது குறித்து அடுத்த மாதம் நடைபெறவிருக்கு மலேசிய கால்பந்து சங்கத்தின் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என அதன் துணைத் தலைவர் டத்தோ முஹமட் யூசோப் மஹாடி தெரிவித்துள்ளார்.
லீ டக்கின் தந்தை பிரிட்டனைச் சேர்ந்தவர் என்றாலும் அவரின் தாய் மலேசியாவைச் சேர்ந்த சீனர் என்பதால் அவர் ஹரிமாவ் மலாயா அணிக்கு விளையாட முடியும் என முஹமட் யூசோப் மஹாடி கூறினார். இதற்கு முன், பிரென்டன் கான், மாத்தியூ டேவிஸ், கிக்கோ இன்சா போன்ற ஆட்டக்காரர்களும் , வெளிநாடுகளில் பிறந்திருந்தாலும் அவர்களின் தாய் அல்லது தந்தை மலேசியாவைச் சேர்ந்தவர்கள் என்ற பட்சத்தில் ஹரிமாவ் மலாயா அணியில் விளையாடி இருக்கின்றனர்.
தற்போது ஹரிமாவ் மலாயாவில் விளையாடி வரும் முஹமாடோ சுமாரே போல், லீ டக்கின் நிலையை ஒப்பிட முடியாது. வெளிநாட்டில் பிறந்திருந்தாலும் , 13 வயது முதல் மலேசியாவில் வசித்து வரும் சுமாரே, ஹரிமாவ் மலாயாவில் இடம்பெற வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன் மூலம் மலேசிய அணியில் இடம்பெற்றிருக்கும் முதல் வெளிநாட்டு ஆட்டக்காரர் என்ற பெருமையையும் சுமாரே பெற்றிருக்கிறார்.
30 வயதுடைய லீ டக், தேசிய கால்பந்து அணி , ஹரிமாவ் மலாயாவில் விளையாட விருப்பம் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அவரை தேசிய அணியில் சேர்த்து கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என யூசோப் மஹாடி மேலும் தெரிவித்தார்.


