கோலாலும்பூர் பிப் 27-
மலாயா பல்கலைக்கழகத்தில் மூன்று நாட்கள் நடந்த உலகத் திருக்குறள் மாநாடு மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்திருப்பதாக ஏற்பாட்டுக் குழுத் தலைவர் செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் தியாகராஜன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
உலகத் திருக்குறள் மாநாட்டை மலேசியாவின் எட்டாவது பிரதமராக பொறுப்பேற்க இருக்கும் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம், தலைமை ஏற்று தொடக்கி வைத்தது மேலும் புகழ் சேர்த்ததாக அவர் குறிப்பிட்டார்.
இரண்டாம் நாள் மாநாடு மிகச்சிறப்பான முறையில் நடந்த வேளையில் நிறைவு விழாவில் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி அவர்கள் கலந்து கொண்டதும் இந்நிகழ்ச்சிக்கு மேலும் புகழ் சேர்த்தது.
டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் தமது உரையில் திருக்குறளின் மகத்துவத்தை குறித்து பேசியது பேராளர்களை வெகுவாக கவர்ந்தது. அதோடு பொது மறை நூலான திருக்குறளை அனைத்து சமயத்தைச் சேர்ந்தவர்களும் படிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டது பலருக்கு வியப்பை அளித்தது.
உலகத் திருக்குறள் மாநாட்டில் கலந்து கொண்டதற்கு அன்வார் இப்ராகிம் இருக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்வதாகவும் தியாகராஜன் குறிப்பிட்டார்.
நிறைவு விழாவில் கலந்து கொண்ட பேராசிரியர் ராமசாமி தமது மனதில் இருந்த அனைத்து விஷயங்களையும் வெளிப்படையாக பேசினார். மச்ச விழாக்களில் அவர் இவ்வாறு பேசி இருக்கிறாரா என்பது குறித்து கூட கேள்வி எழுந்ததாக அவர் தெரிவித்தார். அவருடைய வருகையும் அறிவுரையும் இனிவரும் மாநாட்டை மிகவும் சிறப்பாக நடத்துவதற்கு உத்வேகமாக அமைகிறது என்பதையும் தியாகராஜன் சுட்டிக்காட்டினார்.
உலகத் திருக்குறள் மாநாடு எனும் பட்சத்தில் பல பேராளர்களை கவனிக்க வேண்டியது ஏற்பாட்டுக்குழுவின் பொறுப்பாக இருக்கின்றது. எட்டு நாடுகளிலிருந்து பேராளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார்கள். இவ்விழாவில் எந்த தவறும் நடக்கவில்லை என கூறிவிட முடியாது. இனிவரும் காலங்களில் தவறுகள் நடக்காமல் இருக்க ஏற்பாட்டுக் குழுவினர் மேலும் கவனமாக இருப்பார்கள் என தியாகராஜன் கூறினார்.
இந்த மிகப்பெரிய மாநாட்டை வெற்றி அடைய செய்த ஏற்பாட்டுக் குழுவினருக்கு ஊடகவியலாளர்களுக்கும் இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.


