கோலாலம்பூர் ஜூலை 27-
மலேசிய இந்திய காங்கிரசின் உள்ள இளைஞர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் உயரிய நோக்கத்தில் இளைஞர்களுக்காக வர்த்தக வழிகாட்டி ஆவண தொகுப்பு தயாரிக்கப்படும் என அதன் தலைவர் தினாளன் ராஜகோபால் தெரிவித்தார்.
மலேசிய இந்திய காங்கிரசில் உள்ள இளைஞர்கள் வர்த்தகத் துறையில் ஈடுபட்டால் அவர்களின் மொத்த விவரங்களையும் தாங்கிய ஆவணமாக இது உருவாக்கப்படும். இது கட்சியில் உள்ள இதர வர்த்தகர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். வர்த்தக ரீதியில் மேம்பட நினைப்பவர்கள் வர்த்தகத்தை தங்களுக்குள் பரிமாற்றம் செய்து கொண்டு மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்வதற்கு இது உறுதுணையாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இங்கு உள்ள பிரபல தங்கும் விடுதியில் நடைபெற்ற மலேசிய இந்திய காங்கிரசின் இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பிரிவுகளுக்கான ஆண்டு பொதுக் கூட்டத்தின் தொடக்க விழாவில் உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அரசியல் மாற்றத்திற்கு மிகப்பெரிய உறுதுணையாக இருந்தவர்கள் இளைஞர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. 15வது பொதுத் தேர்தலில் 18 வயதான இளைஞர்கள் வாக்களிக்க இருக்கின்றார்கள். அவர்களுக்கு தேசிய முன்னணி அரசாங்கத்தையும் நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடிய வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருக்கும்.

அந்த அடிப்படையில் நாம்தான் தேசிய முன்னணி அரசாங்கம் இந்நாட்டு இந்தியர்களுக்காக எம்மாதிரியான சில திட்டங்களை முன்னெடுத்து என்பதை உணர்த்த வேண்டும். அதோடு நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் எம்மாதிரியான வாக்குறுதிகளை வழங்கியது? அதை நிறைவேற்றவில்லை என்பதையும் எடுத்துரைத்து அவர்களுக்கு உண்மையை விளக்கம் அளிக்க வேண்டும் என அவர் கூறினார்.
மஇகா மிகப்பெரிய சக்தியாக விளங்கும் இளைஞர்கள் ஒன்றிணைந்தால் நிச்சயம் வரும் பொதுத் தேர்தலில் நாம் வெற்றி பெறலாம் என்றும் அவர் தெரிவித்தார். இந்த மாபெரும் நிகழ்ச்சியில் மாதர் பகுதி தலைவியை உஷா நந்தினி, புத்ரா பிரிவு தலைவர் யுவராஜா, புத்ரி துறை தலைவி சிஎம் ஹேமலதா ஆகியோர் உரையாற்றினர்.


