Homeஅரசியல்அரபு ஓவிய எழுத்து: அனைவரது உணர்விற்கும் மதிப்பளிக்க வேண்டும்! -குணசீலன் ராஜூ

அரபு ஓவிய எழுத்து: அனைவரது உணர்விற்கும் மதிப்பளிக்க வேண்டும்! -குணசீலன் ராஜூ

கோலாலம்பூர், ஆக -6
அடுத்த ஆண்டு தொடக்கம் தமிழ்ப்பள்ளிகளில் இடம்பெறும் தேசிய மொழி பாட புத்தகத்தில் அரபு ஓவிய எழுத்துகள் இடம்பெறும் என்பதை கல்வி அமைச்சு உறுதி செய்திருக்கின்றது. இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு முன்னதாக அனைத்து இனத்தவர்களிடமும் அனுமதி பெறப்படுவது அவசியம் என்பதை மஇகாவின் மத்திய செயலவை உறுப்பினர் குணசீலன் ராஜு வலியுறுத்தினார்.

தேசிய மொழி, ஆங்கில மொழி, தங்கள் தாய்மொழியை பயில்வதற்கு இந்நாட்டில் அனைவருக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பிற மொழி பயன்பாட்டை பாடநூலில் நுழைப்பது மக்களுக்கிடையிலான குறிப்பாக இனங்களுக்கிடையிலான தவறான புரிதலை உருவாக்குவதற்கும் அதிக வாய்ப்புண்டு.

அரபு ஓவிய எழுத்து என்பது எவ்வகையில் இந்நாட்டில் உள்ள இதர இனத்தவர்களுக்கு பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்பதை விளக்கும் கடமை கல்வி அமைச்சுக்கு உண்டு. எந்த பயனும் இல்லாமல் அதனை பயில்வது பிற மாணவர்களுக்கு கூடுதல் சிரமத்தை தரும் என்பதை ஏன் அரசு உணரவில்லை என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார்.

நமது நாட்டின் தேசிய மொழி எனக் கூறப்படும் மலாய் மொழியை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். சீனர்களும் இந்தியர்களும் தேசிய மொழியில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மலேசிய நாட்டின் தேசிய மொழி என்பதால் மலாய் மொழியை அனைத்து இனத்தவர்களும் ஏற்றுக் கொண்டார்கள். அதே பாணியில் அரபு ஓவிய மொழியை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை என்பதையும் குணசீலன் சுட்டிக்காட்டினார்.

கல்வி சார்ந்த ஒரு விவகாரத்தை முன்னெடுக்கும் போது சமுதாயத்தை பிரதிநிதிக்கும் அரசு சாரா இயக்கங்களையும், சமுதாய தலைவர்களையும் அழைத்து விளக்கம் கேட்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அரபு சித்திர மொழியை அறிமுகப்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பது குறித்து இவர்களுக்கு முதலில் விளக்கம் அளிக்க வேண்டும். பின்னர்தான் அத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டுமே தவிர மாணவர்கள் மத்தியில் அரசியல் சிந்தனையோடு செயல்படுவது எந்த வகையிலும் நன்மையைக் கொண்டு வராது என அவர் எச்சரித்தார்.

கல்வி என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று. இங்கு சுயநலத்திற்காக ஒரு விவகாரம் முன்னெடுக்கப்படும் போது அது நாட்டின் அமைதியையும் சுபிட்சத்தையும் பாதிக்கும் என்பதை கல்வி அமைச்சு நினைவில் நிறுத்த வேண்டும். இதனை தொடர்வதற்கு முன்னதாக சமுதாயத் தலைவர்களிடம் ஒரு சந்திப்பு கூட்டத்தை நடத்தி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் குணசீலன் கேட்டுக்கொண்டார்.

spot_img

latest articles

explore more