ரந்தாவ், ஆக 6-
இரண்டு கால்களையும் இழந்த பரதனுக்கு சமூக சேவகி ஈஸ்வரி செயற்கைக் கால்களைப் பெற உதவி செய்தார்.
நெகிரி செம்பிலானைச் சேர்ந்த 20 வயதுடைய பரதனுக்கு சிறு வயது முதலே இரண்டு கால்களிலும் பிரச்சனை இருந்து வந்துள்ளது. குழந்தைப் பருவம் முதல் அவருக்கு கால்கள் இயல்பு நிலையில் இல்லாமல் பலமற்று இருந்து வந்த வேளையில், பரதனால் சுயமாக நகரமுடியாமல் போனது. இதனால் அவரது கல்வியும் பாதிக்கப்பட்டது.
நாளடைவில் அறுவை சிகிச்சையால் இரண்டு கால்களையும் பரதன் இழக்க நேரிட்டது. பின்னர், சமூக ஆர்வலர் ஈஸ்வரியின் உதவியால் பரதனுக்கு செயற்கைக்கால் பொருத்தப்பட்டு இப்போது நடைப் பயிற்சியினையும் மேற்கொண்டு வருகிறார்.
இல்லாதவரைக் காட்டிலும் இயலாதோருக்கே நம் போன்றவரின் உதவியும் ஊக்குவிப்பும் தேவைப்படுகிறது. மேலும், அவர்கள் பொருளாதாரச் சிக்கலில் மாட்டிக்கொண்டிருந்தால், தேவையான உதவிகள் பெறமுடியாமலும் மன அழுத்தத்தாலும் அதிகமாகப் பாதிக்கப் படுவார்கள். எனவே, சில ஆண்டுகளாகத் தன்னால் ஆன இந்த உதவியைச் செய்து வருவதாக ஈஸ்வரி தெரிவித்தார். மேலும், தன்னிடம் உதவி நாடி வருவோரின் மருத்துவ ஆவணங்கள், குடும்பப்பின்னணி ஆகியவற்றை முறையாக ஆராய்ந்த பின்னர், தேவையான உதவிகளைச் செய்து வருவதாகவும் ஈப்போவைச் சேர்ந்த ஈஸ்வரி கூறினார்.
பரதன் போல் பொருளாதாரச் சிக்கலில் தவிக்கும் குடும்பங்களில் செயற்கைக்கால்கள் தேவைப் படுவோர் ஈஸ்வரியை 018-3588676 என்னும் எண்களில் அழைக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.


