ஆராவ், ஆகஸ்ட்.16-
பெர்லிசில் நடைபெற்று வரும் சமய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வேண்டாம் என சர்ச்சைக்குரிய மத போதகர் டாக்டர் சாக்கீர் நாய்க்கிற்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க திட்டமிட்டிருந்த சாக்கீர் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பை கருதி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பெர்லிஸ் மாநில காவல்துறைத் தலைவர் நூர் முஷார் தெரிவித்துள்ளார்.
சாக்கீர் மீது காவல்துறையில் 150-க்கும் மேற்பட்ட புகார்கள் செய்யப்பட்டுள்ளதால், இந்நிகழ்ச்சியில் அவர் பங்கேற்காமல் இருப்பது சிறந்த முடிவாகும் என நூர் முஷார் கூறினார். சாக்கீர் பெர்லிஸ் மாநிலத்துக்கு வரலாம். ஆனால் அவர் அந்நிகழ்ச்சியில் உரையாற்றினால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நூர் முஷார் எச்சரித்தார்.
மலேசியா பல்லின மக்கள் வாழும் நாடு. எனவே இதர இனங்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கப்பட வேண்டும் என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அடுத்த முறை சமய நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாற்ற விரும்பினால், சாக்கீர் நாய்க் 10 நாட்களுக்கு முன்னதாகவே நோட்டிஸ் வழங்க வேண்டும் என்றும் நூர் முஷார் தெரிவித்தார்.


