Homeசமூகம்ஜாவி மொழியை எதிர்த்துப் புரட்சி எனும் அமைதிப் பேரணி!

ஜாவி மொழியை எதிர்த்துப் புரட்சி எனும் அமைதிப் பேரணி!

கோலாலம்பூர், ஆகஸ்ட், 19-

அடுத்த ஆண்டுத் தொடங்கி ஜாவி எழுத்துத் தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளின் நான்காம் ஆண்டு மலாய் பாட புத்தகத்தில் இடம்பெறும் என்பதைக் கல்வி அமைச்சு மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கின்றது.

பெற்றோர்கள் விரும்பினால் இந்த மொழியை மாணவர்கள் கற்கலாம் என்பதைக் கல்வியமைச்சு உறுதிப்படுத்தியுள்ள நிலையில் பாடபுத்தகத்தில் இம்மொழி இடம்பெறக்கூடாது எனப் பல அரசு சாரா இயக்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் ஜாவி எழுத்தை பாடபுத்தகத்தில் இணைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் ‘புரட்சி’ எனும் மாபெரும் அமைதிப் பேரணி ஆகஸ்ட் 23-ஆம் தேதி பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் நடைபெறவிருக்கின்றது. இதில் 1000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகத் தலைமை ஒருங்கிணைப்பாளர் உமாகாந்தன் தெரிவித்தார்.

அன்றைய நாள் இரவு 7 மணிக்கு இப்பேரணி தொடங்கவிருக்கிறது. முன்னதாகக் கிராண்ட் பசிவிக் தங்கும் விடுதிகளில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்த கையெழுத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நான் ஒரு தமிழன் இயக்கத் தலைவர் உமாகாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜாவி எழுத்தை எதிர்த்து 31 அமைப்புகளுடன் சீன அமைப்புகளும் இணைந்து புரட்சி எனும் அமைதிப் பேரணியில் கலந்து கொள்கிறார்கள்.  இந்த அமைதிப் பேரணியின் நோக்கம் பிரதமர் குறித்தோ அல்லது அரசாங்கம் குறித்தோ விமர்சிப்பதற்குக் கிடையாது. மலாய் மொழியில் சீன மொழியில் தமிழ் மொழியில் 3 பேர் இந்தப் புரட்சியின் நோக்கம் குறித்துப் பேசுவார்கள்.

புரட்சி அமைதிப் பேரணியைத் தொடங்குவதற்கு முன்னதாக வாயை துணியால் கட்டி அதே இடத்தில் நிற்கும் நடைமுறையும் முன்னெடுக்கப்படும். இந்தப் புரட்சி பேரணியின் மூலம் ஆறு கோரிக்கைகள் முன்வைக்கப்படும். அவை அனைத்தும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அனைத்து அமைச்சர்களின் பார்வைக்கும் கொண்டு செல்லப்படும் என உமாகாந்தன் கூறினார்.

கருப்புச் சட்டை அணிந்து இந்த நாளில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.இதில் கலந்து கொள்ள முடியாதவர்கள் கூட ஆகஸ்டு 23 ஆம் தேதி அன்று கருப்புச் சட்டை அணிந்து நமது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

ஜாவி எழுத்து விவகாரம் குறித்துத் தொடர்ந்து கேள்வி எழுப்புவதைக் காட்டிலும் அதற்கான தீர்வு என்ன என்பது குறித்துத் தான் நாம் சிந்திக்க வேண்டும். ஒரு சிறிய கூட்டம் தான் ஜாவி எழுத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறது எனக் கூறப்படும் நிலையில் இந்தியர்கள் சீனர்கள் ஜாவி எழுத்துத் திணிப்பை விரும்பவில்லை என்பதை உணர்த்தும் வகையில் இந்த அமைதிப் பேரணி அமையும் என உமாகாந்தன் தெரிவித்தார்.

spot_img

latest articles

explore more