கோலாலம்பூர், திசம்பர் 1:-
முன்னாள் மலேசியக் காற்பந்தாட்டக் குழுவின் பயிற்றுநர் கே. இராஜகோபால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு புருனெயின் தேசியக் காற்பந்து குழுவின் பயிற்றுநராக நியமணம் செய்யப்பட்டார்.
இத்தகவலை அந்நாட்டு காற்பந்து குழுவின் தலைவர் பெங்கிரான் ஹாஜி மாத்துசின் பெங்கிரான் ஹாஜி மாத்தாசான் அறிவித்ததாக புருனெய் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்தப் பொறுப்புக்கான விண்ணப்பங்களையும் பரிசீலனையையும் சீராய்ந்த பிறகு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு புருனெய் காற்பந்து குழுவின் புதிய தலைமைப் பயிற்றுநராக இராஜகோபால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது அவ்வளவு எளிதான முடிவல்ல. பல கோணங்களில் சிந்தித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜெர்மன், செர்பியா போன்ற நாடுகளில் இருந்து இப்பொறுப்புக்கு விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
2009 சீ விளையாட்டுப் போட்டியிலும் 2010 ஏஎஃப்எஃப் கிண்ணப் போட்டியிலும் மலேசியக் காற்பந்து அணியை வெற்றிப் பாதையில் பயணிக்க வைத்தவை எல்லாம் கே இராஜகோபால் தலை சிறந்த பயிற்றுநர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
இராஜகோபால் பொருத்த வரையில் புருனெய் அணி அவருக்குப்புதிதல்ல. அவர் மலேசிய அணியின் பயிற்றுநராக்க இருந்தபோதும் புருனெய் அணி மலேசியாவை எதிர்த்து விளையாடி இருக்கிறது.
எனவே, புருனெய் அணியை நிர்வகிப்பதிலும் பயிற்சி அளிப்பதிலும் அவருக்கு சிக்கல் ஒன்றும் நேராது எனத் தாம் நம்புவதாக புருனெய் தேசியக் காற்பந்து குழுவின் தலைவர் பெங்கிரான் ஹாஜி மாத்துசின் பெங்கிரான் ஹாஜி மாத்தாசான் தெரிவித்தார்.


