பெட்டாலிங் | 5/7/2021:-
கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டுள்ள சன்வே மெந்தாரி கோர்ட் அடுக்ககத்தின் குடியிருப்பாளர்களுக்கு இன்று தொடங்கி கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இங்கு ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் சென்று கோவிட்-19 பரிசோதனையை முடித்த பின்னர் இன்று முதல் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் நடவடிக்கை கட்டம் கட்டமாக நடந்து வருகிறது.
குடியிருப்பாளர்கள் அனைவரும் கட்டாயத் தனைமைப்படுத்தலை தங்கள் வீட்டிலேயே மேற்கொள்ள ஆணையிடப்பட்டுள்ள நிலையில், சுகாதாரப் பணியாளர்கள் இவ்வடுக்ககப் பகுதிக்கே நேரடியாக வந்து தடுப்பூசி போடப்படும் நடவடிக்கை நடந்து வருகிறது.
இப்பகுதியின் மொத்தக் கட்டுப்பாடும் தற்போது காவல்துறை, சுகாதார அமைச்சு ஆகியவற்றின் கீழ் உள்ளது. இவர்களுக்கு உதவியாக ஆயுதப்படை, ரேலா தொண்டூழியர்கள், செம்பிறைச் சங்கம் ஆகியன செயல்பட்டு வருகின்றன.
இன்று மாலை 5.00 மணி அள்விலான நிலவரப்படி, இங்கு 1,553 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டது எனவும் இது நாளையும் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இம்மாதம் முதல் தேதி முதல் இரண்டு வாரங்களுக்கு மெந்தாரி கோர்ட் அடுக்ககப் பகுதியில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டுள்ளது.
மெந்தாரி கோர்ட் அடுக்ககத்தில் 3,469 வீடுகள் இருப்பதாகவும் ஏறத்தாழ 17,000க்கும் மேற்பட்டக் குடியிருப்பாளர்கள் இங்கு வசித்து வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அவ்வெண்ணிக்கையில் 60 விழுக்காட்டினர் மலேசியர்கள் எனவும் எஞ்சிய 40 விடுக்காட்டினர் வெளிநாட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டது.





