கோலாலம்பூர் | 14/12/2021 :-
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரனின் ‘மந்திரக் கணங்கள் நூல் வெளியீட்டு விழாவின்போது, அரங்கில் கூடி இருந்த மக்களின் வாழ்த்தொலிக்கு மத்தியில், மனித வள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் அவர்களுக்கு ‘சொல்வேந்தர்’ எனும் விருது வழங்கப்பட்டது.
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரன், தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்க நிர்வாக இயக்குநர் டத்தோ பா.சகாதேவன், தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் டத்தோ ஜி.சங்கரன், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை தலைவர் முனைவர் மணிமாறன் ஆகியோர் இந்த விருதுக்கான கேடயத்தை வழங்க, டத்தோஶ்ரீ எம்.சரவணன் சார்பில், மாஹ்ஷா பல்கலைக்கழக வேந்தர் தான்ஶ்ரீ டத்தோ டாக்டர் ஹனிபா விருதைப் கொண்டார்.

அதற்குமுன்னர், டத்தோ எம்.சரவணன் அவர்களின் தமிழ் சார்ந்த முன்னெடுப்புகள், அயராதப் பணிகள் ஆகியவற்றை விளக்கும் வகையில் பாடல் உருவாக்கப்பட்டு, தொடர்புடைய படங்களோடு ஒளிபரப்பட்டது.
அதன் பின்னர் உரையாற்றிய எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரன், தான் எழுதிய வாழ்த்து மடலை வாசித்தார்.
ஒரு காலத்தில், தமிழக ஆளுமைகளின் தமிழ் நாம் மகிழ்ந்தோம். இன்று உலகத் தமிழ் மேடைகள், டத்தோஶ்ரீ எம்.சரவணன் அவர்களின் உரை கேட்க காத்திருக்கின்றன. உலகளாவிய நிலையில் அவர் கலந்து கொள்ளும் தமிழ் மாநாடுகளில், அவரின் உரையைக் கேட்டு பாராட்டுகின்றனர்.
மலேசியாவிலும் அவர் கலந்து கொள்ளாத தமிழ் மாநாடுகள் இல்லை என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. அவரின் தமிழ் கேட்டு மலேசிய மக்களும் இன்புறுகிறோம்.
இந்தச் சபையில் கூடி இருக்கும் தமிழ் ஆர்வலர்களின் முன்னிலையில் நாட்டின் மூத்த அமைப்புகளின் நிகராளிகளின் கரங்களால் மனித வள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் அவர்களுக்கு ‘சொல்வேந்தர்’ எனும் விருது வழங்கப்படுவது அவரின் தமிழ்ச் சேவைகளுக்கு நாம் செய்யும் மரியாதையாக அமையும் என இராஜேந்திரன் அறிவித்தார்.
தமிழுக்காகத் தொண்டு செய்பவர்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும். தொடர்ந்து பணியாற்ற இதுபோன்ற அங்காரங்கள் ஊக்கமளிக்கும்.
அரங்கில் திரண்டிருந்த மக்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பி தங்களின் வாழ்த்துகளை தெரிவித்தனர்.


