Homeசமூகம்தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்திற்கு வெ.1 லட்சம் நிதியுதவி! -டத்தோஸ்ரீ சரவணன்

தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்திற்கு வெ.1 லட்சம் நிதியுதவி! -டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர், மே 4-

பல்வேறு சவால்களுக்கு மத்தியில் செய்திகளை மக்களுக்குச் சென்று சேர்ப்பதில் பத்திரிகைப் பணியாளர்கள் பெரும் பங்களிப்பை வழங்கி வருகின்றனர். இவர்களின் மேம்பாட்டிற்கு உதவும் வகையில் தமது அமைச்சின் வாயிலாக மலேசிய தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்திற்கு 1 லட்சம் வெள்ளியை வழங்கவிருப்பதாக மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.

ஊடகங்களில் பணியாற்றுவோரில் பெரும்பாலோருக்கு நிரந்தர சேமிப்பு இருக்காது. இதனால் இவர்களின் பொருளாதாரம் பாதிப்படையும். அடுத்து, இவர்களின் நலன் காக்க முதலாளிமார்கள் இவர்களுக்கு சமூக பாதுகாப்பு நிறுவனத்தில் (சொக்சோ) சந்தா செலுத்த வேண்டும். இதனைக் கட்டாயமாக்கும் நடவடிக்கையில் அமைச்சு விரைவில் ஈடுபடும் என்றார்.

தமிழ்ப் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் குடும்ப தின விழாவில் சிறப்புச் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊடகத்துறையில் பல ஆண்டுகள் பணியாற்றியவர்களின் குழுப்படம்

“ ஊடக பணியாளர்களின் சமூக நலன் அவசியம் பாதுகாக்கப்பட வேண்டும். இவர்களுக்கு முதலாளிமார்கள் சொக்சோ சந்தா செலுத்துவதை அமைச்சு உறுதிப்படுத்துவதற்கான காலம் கனிந்துவிட்டது” என்று இங்குள்ள முத்தியாரா கொம்ளெக்சில் நடைபெற்ற மலேசிய தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் குடும்ப தின விழாவைத் தொடக்கி வைத்த பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.

குடும்ப தின விழாவில் கலந்து கொண்ட பிரமுகர்கள்

“இது ஆபத்து நிறைந்த துறை. எந்த நேரத்திலும் பணியாற்ற இவர்கள் தயாராக வேண்டும். இவர்களையும் இவர்களின் குடும்பத்தினரையும் பாதுகாக்கக் கூடியது காப்புறுதி ஒன்றே. ஒரு சில முதலாளிமார்கள் இவ்விவகாரத்தில் பாராமுகம் காட்டி வருகின்றனர். இவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் கட்டாயத்தில் நாங்கள் இப்போது தள்ளப்பட்டிருக்கிறோம்” என்றார் அமைச்சர். இதன் பொருட்டு முதலாளிமார்கள் அனைவரும் தங்கள் பணியாளர்களுக்கு சொக்சோ சந்தாவை அவசியம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே, அரசாங்கத்தின் 1,500 வெள்ளி குறைந்தபட்ச சம்பளத் திட்டத்தை முதலாளிமார்கள் அனைவரும் அவசியம் அமல்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மலேசிய தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்திற்கு இன்று 10,000 வெள்ளி அன்பளிப்பு வழங்கிய சரவணன் உறுப்பினர்களின் மேம்பாட்டிற்காக மேலும் 1 லட்சம் வெள்ளி வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

கு. தேவேந்திரன் தலைமையில் இச்சங்கத்தின் குடும்ப தின விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது குறித்து தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன் தனது மகிழ்ச்சியையும் மனநிறைவையும் வெளிப்படுத்தினார்.

சங்க உறுப்பினர்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு அவர்களுக்காக அரசாங்கத்தின் மூலம் காப்புறுதி, கடனுதவி போன்ற ஏதாவது ஓர் அனுகூலத்தைப் பெற்றுத் தரும்படி சங்கத்தின் தலைவர் தேவேந்திரன் தனது உரையின்போது அமைச்சரிடம் வேண்டுகோளை முன் வைத்தார்.

வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட சுபாஷினி அமிர்தம்.

ஆடல், பாடல், ஆமாம், இல்லை போட்டி, பலூன் ஊதுதல், அதிர்ஷ்ட குலுக்கு என தொய்வில்லாத நிகழ்ச்சிகள் வந்திருந்தோரை உற்சாகத்தில் ஆழ்த்தின என்றால் மிகையாகாது.

கோபி ஏற்பாட்டுக் குழு தலைவராகச் செயல்பட்ட இக்குடும்ப தின விழாவில் 21ஆம் நூற்றாண்டில் கற்றல், கற்பித்தல் நடவடிக்கையில் சிறப்பு சாதனை படைத்ததற்காக உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றவரும் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றவருமான சுபாஷினி அமிர்தம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கௌரவிப்பு அங்கமும் நிகழ்ச்சிக்குச் சிறப்புச் சேர்த்தன.

மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையார், டத்தோ ஏ.கே.ராமலிங்கம், டத்தோ ஏ.டி.குமாரராஜா, டத்தோ சுரேஷ், எஸ்.ஏ.சி. டத்தோ குமரன், டாக்டர் சத்தியா உள்ளிட்ட பல பிரமுகர்கள் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்தனர்.

தயாளன் சண்முகம், ஜமுனா வேலாயுதம் இருவரின் கலகலப்பான அறிவிப்பில் மலர்ந்த இவ்வாண்டின் குடும்ப தின விழா அதிர்ஷ்ட குலுக்கின் முதல் பரிசான 65 அங்குல தொலைக்காட்சிப் பெட்டியை மக்கள் ஓசையைச் சேர்ந்த அல்லிமுத்து வாகை சூடினார்.

எஸ்பி கேர் குழுமத்தின் தலைவர் டாக்டர் சத்திய பிரகாஷ் வழங்கிய முதல் பரிசை தட்டிச் சென்ற அல்லிமுத்துவுடன் ஏற்பாட்டுக்குழுவினருடன். அம்மா இரதனவள்ளி

குடும்ப தின விழா சிறப்பாக நடைபெற சங்கத்தின் செயற்குழுவினரோடு இணைந்து நல்லாதரவு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் துணைத் தலைவர் கு.சா. ராமசாமி நன்றி தெரிவித்தார்.

spot_img

latest articles

explore more