Homeசமூகம்புதிய தடத்தில் பயணிக்கத் தயாராகிறது கோலாலம்பூர் –சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கம்! -நிவாஸ் ராகவன்

புதிய தடத்தில் பயணிக்கத் தயாராகிறது கோலாலம்பூர் –சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கம்! -நிவாஸ் ராகவன்

கோலாலம்பூர், மே 26-

புதுப் புது செயல்திட்டங்கள் வாயிலாக இந்திய வர்த்தகர்களை அடுத்த கட்டத்திற்கு இட்டுச் சென்று அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதே கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் பிரதான இலக்கு என்கிறார் இச்சங்கத்தின் புதிய தலைவராக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிவாஸ் ராகவன்.

புதிதாக வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளோர், சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறையினர் உள்ளிட்ட வர்த்தக சமூகத்தினரின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான வரைவு திட்டத்தைத் தாங்கள் கொண்டிருப்பதாக நிவாஸ் விவரித்தார்.

இதன் பொருட்டு கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் பல்வேறு துறைகளில் வர்த்தகம் புரிந்து வருபவர்களை ஆற்றல்மிக்க மற்றும் முன்னேற்றகரமான வர்த்தக சமூகமாக மாற்றுவதற்கு ஆக்கப்பூர்வ திட்டங்களை சங்கம் வகுத்துள்ளதாக இங்குள்ள ரோயல் லேக் கிளப்பில் நடைபெற்ற விருந்துபசரிப்பு மற்றும் சங்கப் பொறுப்பாளர்களுக்கு அதிகாரப்பூர்வ கடிதங்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.

துடிப்புமிக்க இந்திய வர்த்தக சமூகத்தை உருவாக்குவதில் முன்னணி அமைப்பாகத் திகழும் சங்கத்தின் இலக்கை அடைவதற்கு ஏதுவாக பொறுப்பாளர்களைக் கொண்ட புதிய பணிக்குழு நான்கு நிலைகளை உள்ளடக்கியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

அதே வேளையில், 2026 தூரநோக்கு இலட்சிய திட்டம் பல்வேறு தொழிற்துறைகளைச் சேர்ந்த இந்திய தொழில் முனைவர்களை நவீனமயம், இலக்கவியல் சார்ந்த ஆற்றல்மிக்க வர்த்தக சமூகமாக உருமாற்றும் இலக்கைக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இச்சங்கத்தின் நிர்வாகச் செயற்குழுவில் நிர்வாக செயலவையினரோடு தேர்ந்தெடுக்கப்பட்ட 12 செயற்குழு உறுப்பினர்களோடு நியமிக்கப்பட்ட 6 செயற்குழு உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளதாக அவர் சொன்னார்.

வாரிய ஆலோசகர்களாக டத்தோ பர்திப் குமார், டான்ஸ்ரீ ஆர். துரைசிங்கம் பிள்ளை, டான்ஸ்ரீ ரவீந்திரன் மேனன், டான்ஸ்ரீ என்.பூவன், டத்தோ சுசிலா மேனன், ராஜசிங்கம் மற்றும் மனோகரன் மொட்டையன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

தனது தலைமையிலான கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் புதிய நிர்வாக செயலவையில் சிறிய வர்த்தகம் தொடங்கி பங்கு சந்தையில் இடம் பெறும் அளவுக்குப் பெரிய நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழு உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் பல்வேறு தொழிற்துறைகளில் பரந்த அனுபவம் பெற்றவர்களாகவும் இருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

ஐக்கியமும் ஆற்றலும் நிறைந்த குழு இது என்று வர்ணித்த நிவாஸ் .இந்திய வர்த்தக சமூகத்தின் உயர்வுக்காக இத்தகு குழு அமைக்கப்படுவது இதுவே முதன் முறையாகும் என்றார். இதனிடையே, சங்கத்தில் தங்களின் பொறுப்புகளுக்காக 43 பேருக்கு நிவாஸ் ராகவன் அதிகாரப்பூர்வ நியமனக் கடிதங்களை வழங்கினார்.

spot_img

latest articles

explore more