Homeகுற்றவியல்வேறொரு மாணவர் பாதிக்கப்படக்கூடாது! மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும்! சிவக்குமார்

வேறொரு மாணவர் பாதிக்கப்படக்கூடாது! மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும்! சிவக்குமார்

அலோர்ஸ்டார், மே 24-

கெடா சிந்தோங்கில் உள்ள மலேசிய உத்தாரா பல்கலைக்கழகத்தின் (UUM) 20 வயது கணக்கியல் மாணவி கடந்த சனிக்கிழமை தனது விடுதி அறையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகின்றது.

நான்காம் தவணை மாணவியான எஸ் வினோசினி, இந்த துயர சம்பவம் நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் வளாகத்திற்குத் திரும்பினார். அம்மாணவியின் தந்தை ஆர் சிவக்குமார், 65, நேற்று தம் மகள் இறந்ததை உறுதிப்படுத்தினார்.

பெருந்தோற்று காரணமாக அம்மாணவி இயங்கலை வாயிலான மேற்கல்வியை தொடர்ந்து வந்ததாகவும் கடந்த மே 14ஆம் தேதி தாம் தான் தமது மகளைத் தங்கும் விடுதிக்கு அனுப்பியதாகக் கூறிய சிவக்குமார், இப்போது அவர் நிரந்தரமாகச் சென்று விட்டார் என கண் கலங்கிய நிலையில் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை மாலை 3 மணிக்கு UUM நிர்வாகம் தம்மை அழைத்தபோது, ​​ தமது மகள் கீழே விழுந்து சுயநினைவை இழந்துவிட்டதாக மட்டுமே கூறியதாக சிவக்குமார் கூறினார்.

“அவர்கள் தெளிவற்ற முறையில் என்னிடம் பேசினார்கள், உண்மையில் என்ன நடந்தது என்று என்னிடம் சொல்லவில்லை. எனது மகன் இன்னும் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா என்று நான் கேட்ட பிறகு, அவள் இறந்துவிட்டார் என்று மட்டுமே என்னிடம் சொன்னார்கள்.”

“அவளது தங்கும் அறை இப்போது மூடப்பட்டுள்ளது. அங்குள்ள சூழ்நிலையை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. அவரது தொலைப்பேசி இன்னும் பூட்டிய அறையிலேயே உள்ளது. காவல்துறை அவரது பணப்பையையும் அடையாள அட்டையையும் மட்டுமே என்னிடம் கொடுத்தனர்,” என்று அவர் மேலும் கூறினார். இதனிடையே நேற்று காலை கிள்ளானில் இறுதிச்சடங்கு நடைபெற்றது.

தனது மகளின் மரணம் தொடர்பாகப் பல்கலைக்கழக நிர்வாகமும், காவல்துறையும் தெளிவான விளக்கம் அளிக்காததால் விளக்கம் கேட்டுப் போராடப் போவதாக சிவக்குமார் கூறினார்.

அலோர் ஸ்டாரிக் உள்ள சுல்தானா பாஹியா மருத்துவமனையில் தமது மகளின் உடலை மருத்துவர் காட்டியபோது முகம் மற்றும் வலது கை மற்றும் அவரது இரண்டுவிரல்களில் வெளிப்படையான தீக்காயங்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

உடல்கூறு பரிசோதனை செய்த மருத்துவர், மின்சாரம் தாக்கியதே மரணத்துக்குக் காரணம் என்றும் தெரிவித்ததாக சிவக்குமார் கூறினார்.

”நான் அவர்களிடம் (UUM நிர்வாகத்திடம்) கூறினேன், எனக்கு உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும். என் மகள் எப்படி இறந்தாள்? என்று எனக்குத் தெரிய வேண்டும், அவ்வளவுதான் என்றேன். அவர்கள் என்னை விசாரணைக்குக் காத்திருக்கச் சொன்னார்கள். அதே நேரத்தில் மருத்துவரே மரணத்திற்கான காரணத்தை என்னிடம் கூறினார்.

உண்மை காரணம் என்ன என்பது எனக்குத் தெரிய வேண்டும். எப்படி மின்சாரம் தாக்கியது. இது எப்படி நடந்தது என்பதை எனக்கு விளக்க வேண்டுமென சிவக்குமார் தெரிவித்தார்.

“மற்ற மாணவர்களுக்கும் இதே நிலை வருவதை நான் விரும்பவில்லை.பல்கலைக்கழகத்தில் உள்ள வசதிகளில் தவறு இருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன், ஆனால் பல்கலைக்கழகம் அதை ஒப்புக்கொள்ளுமா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனிடையே பல்கலைக்கழக நிர்வாகம் அந்த மாணவி இறந்த செய்தியை உறுதிப்படுத்திய சூழ்நிலையில் அதற்கான உண்மை காரணத்தை அறிய முழுமையான விசாரணைக்காகக் காத்திருப்பதாகக் கூறியுள்ளனர்

spot_img

latest articles

explore more