புத்ராஜெயா, ஜூன் 1-
நாட்டின் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப் துன் ரசாக் அவர்கள் பிரதமராகப் பொறுப்பேற்றிருந்த காலக்கட்டத்தில் 7 புதிய தமிழ்ப்பள்ளிகள் நிர்மாணிக்க அனுமதி வழங்கப்பட்டது. அவற்றுள் 4 பள்ளிகள் கட்டிமுடிக்கப்பட்டுச் செயல்படுகின்ற நிலையில் இன்னும் மூன்று பள்ளிகள் பல்வேறு காரணங்களால் செயல்படாமல் போயின.
குறிப்பாக இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பாசீர் கூடாங் வட்டாரத்தில் 20 மில்லியன் ரிங்கிட் பொருட்செலவில் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்ட பண்டார் ஶ்ரீ அலாம் தமிழ்ப்பள்ளிக்குக் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் செயல்படுவதற்கான அனுமதி வழங்கப்படவிருந்த வேளையில், தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் அனுமதி முடக்கப்பட்டது. மாணவர்களின் நலன் கருதி பாதிப்படைந்த பகுதி உட்பட ஏனைய பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்ய வேண்டிய காரணத்தினால் கல்வி அமைச்சு அனுமதி வழங்குவதில் காலத்தாமதம் ஏற்பட்டது.
இது தொடர்பில் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். கல்வி அமைச்சின் வழி கிடைக்கப்பெறும் CPC எனப்படும் பள்ளிக் கட்டிடத்தைப் பயன்படுத்த அனுமதிக்கும் சான்றிதழுக்குப் பிறகே பள்ளி செயல்படுவதற்கான அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதால் அனைத்துத் தரப்பினரும் அச்சான்றிதழுக்குக் காத்திருந்தனர்.
கல்வித்துணையமைச்சர் டத்தோ மா ஹாங் சூன் அவர்கள் அலுவலகத்தின் தொடர்முயற்சியின் விளைவாக அனைத்துச் சிக்கல்களும் தீர்க்கப்பட்டுப் பள்ளி செயல்படுவதற்கான சான்றிதழ் மாநில கல்வி இலாகவிடம் முறையாக ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் 528-வது தமிழ்ப்பள்ளியாகச் செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அப்பள்ளியின் வாரிய குழுத்தலைவர் திரு.சபாபதி உள்ளிட்ட குழுவினர் கல்வித்துணையமைச்சர் டத்தோ மா ஹாங் சூன் அவர்களைக் கல்வி அமைச்சில் சந்தித்தனர்.
கல்வித்துணையமைச்சருக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்பதிகாரி திரு. சிவா அவர்களுக்கும் தங்களது மனபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். இச்சந்திப்பின்போது பள்ளிக்கட்டிடம் மாநில கல்வி இலாகாவிடம் ஒப்படைக்கப்பட்ட பின் பள்ளி செயல்படுவதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
கல்வி அமைச்சின் இந்த அனுமதியைப் பயன்படுத்தி மிக விரைவில் பள்ளிச் செயல்படுவதற்கு மாநில கல்வி இலாகா மூலம் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இச்சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. தாம் வாக்குறுதி அளித்தது போல் ஜூன் மாதத்திற்குள் இந்த அனுமதியைப் பெற்றுத் தந்திருப்பதையும் இதன்வழி அனைத்துப் பள்ளிகளுக்குமான தமது சேவை அரசியலுக்கு அப்பாற்பட்டது என்றும் கல்வித்துணையமைச்சர் டத்தோ டாக்டர் மா குறிப்பிட்டுப் பேசினார்.
நாட்டின் 528 வது தமிழ்ப்பள்ளியாகப் பண்டார் ஶ்ரீ அலாம் தமிழ்ப்பள்ளி உருவெடுக்கத் துணைநின்ற அனைத்துத் தரப்பினருக்கும் கல்வித்துணையமைச்சரின் சார்பில் நன்றி கூறிக்கொள்வதாகத் திரு. சிவா தெரிவித்தார்.


