spot_img
11.2 C
London
spot_img
Home மலேசியா அந்நிய தொழிலாளர்கள் அனுமதி:”எங்களை நிம்மதி பெருமூச்சு விடச் செய்துள்ளது”-டத்தின் மகேஸ்வரி

அந்நிய தொழிலாளர்கள் அனுமதி:”எங்களை நிம்மதி பெருமூச்சு விடச் செய்துள்ளது”-டத்தின் மகேஸ்வரி

0
217

கோலாலம்பூர், செப்.11-

ஜவுளியகங்கள்,  முடி திருத்தும் நிலையங்கள் மற்றும் நகைக்கடைகள் ஆகியவற்றில் வேலை செய்வதற்கு 7,500 அந்நிய தொழிலாளர்களுக்கு அனுமதி அளித்திருக்கும் அரசாங்கத்திற்கு இந்திய  மலேசிய இந்தியர் ஜவுளி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் டத்தின் மகேஸ்வரி நன்றி தெரிவித்தார்.

“மேற்குறிப்பிட்ட மூன்று தொழிற்துறைகளைச் சேர்ந்த நாங்கள் அனைவரும் அரசாங்கத்திற்கு வரி செலுத்துகிறோம். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வ பங்களிப்பை வழங்கி வருகிறோம்” என்றார் மகேஸ்வரி.

 அந்நிய தொழிலாளர்கள் இல்லாததால் எங்களின்  வர்த்தகம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வரி மட்டுமின்றி கடனைத் திரும்பச் செலுத்த முடியாமலும் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகிறோம். இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும்படி பல ஆண்டுகளாக அரசாங்கத்திடம் நாங்கள் முறையிட்டு வருகிறோம்.

வர்த்தகம் பாதிக்கப்பட்டதால் பலர் திவாலாகிவிட்டனர். இன்னும் சிலர் கடைகளை இழுத்து மூடும் நிலையில் உள்ளனர் என்று இங்குள்ள ஜெயபக்தி மண்டபத்தில் மனித வள அமைச்சர் சிவகுமார் 30 தமிழ்ப்பள்ளி நூலகங்களுக்கு புத்தகங்களை வழங்கிய நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார்.

இவ்விவகாரத்திற்குத் தீர்வு காணும் வகையில் முதற்கட்டமாக 7,500 அந்நிய தொழிலாளர்களைத் தருவிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக  கடந்த வெள்ளிக்கிழமை மனித வள அமைச்சர் வ. சிவகுமார் அறிவித்தது தங்கள் அனைவரையும் நிம்மதி பெருமூச்சுவிடச் செய்ததாக அவர் விவரித்தார்.

“இவ்வேளையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், அமைச்சர் சிவகுமார், துணையமைச்சர்  செனட்டர் சரஸ்வதி கந்தசாமி, அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசாதியோன் மறைந்த அமைச்சர் டத்தோஸ்ரீ சாலாவுடின் அயோப் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார் மகேஸ்வரி.