spot_img
11.9 C
London
spot_img
Home சமூகம் இளைஞர்கள் நற்பண்புமிக்கவர்களாகத் திகழ அடிப்படை சமய கல்வி அவசியம்! டத்தோஸ்ரீ சரவணன் வலியுறுத்து

இளைஞர்கள் நற்பண்புமிக்கவர்களாகத் திகழ அடிப்படை சமய கல்வி அவசியம்! டத்தோஸ்ரீ சரவணன் வலியுறுத்து

0
198

காஜாங், அக். 18-

நமது இளைஞர்கள் நற்பண்புகளோடும் உயர்நெறிகளோடும் வாழ்வதற்குத் தேவை அடிப்படை சமய கல்வி.ஒருவரின் வளமான வாழ்க்கையைத் தீர்மானிக்கும் அளவுகோல் சமய கல்வியே என்று மஇகா தேசிய  துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.

முன்பெல்லாம் கோவில்களில் தேவாரம் போதிக்கப்பட்டு வந்தது.இதன் வழி இளம் வயதில் சமய போதனையைக் கற்றும் கொண்டு இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையைச் செம்மைப்படுத்திக் கொள்ள முடிந்தது.இன்று இத்தகைய வகுப்புகள் குறைந்து போகவே பிள்ளைகளுக்கு சமய வழிகாட்டி இல்லாமல் போகிறது. இவர்கள் தங்கள் முன் எதைப் பார்க்கிறார்களோ அதில் எளிதாகக் கவர்ந்துவிடுகிறார்கள்.

“அக்காலத்தில் மனைவி வீட்டில் இருந்து பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வார்கள். ஆகையால் இவர்களின் கண்காணிப்பில் பிள்ளைகள் இருப்பார்கள். ஆனால் இன்றோ கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் சென்றால்தான் குடும்பத்தை வழிநடத்த முடியும். இதனால் பிள்ளைகளின் நடவடிக்கையை அவர்களால் சரிவர கண்காணிக்க முடியாமல் போகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான் தீய செயல்களில் அவர்கள் ஈடுபடத் தொடங்குகின்றனர் என்று காஜாங்  சிறைச்சாலை தலைமையக அரங்கில்  மலேசிய சிறைச்சாலை துறை துணை ஆணையர் அண்ணாதுரை காளிமுத்துவின் ” தனி ஒருவன் நினைத்துவிட்டால்” நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய சிறப்புரையில்  விவரித்தார்.

“எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் அன்னையின் வளர்ப்பினிலே எனும் பாடல் வரிகளுக்கு ஏற்ப பிள்ளைகள் நல்லவர்களாக வளர்வதற்கு அன்னையின் வளர்ப்பும் அடிப்படை சமய கல்வியும் அவசியம் ” என்று வலியுறுத்தினார் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன்.

“சிறைச்சாலை துறை துணை ஆணையர் அண்ணாதுரை காளிமுத்துவின்  ” தனி ஒருவன் நினைத்துவிட்டால்” நூல் காலத்தின் கட்டாயம். குற்றச் செயல்களில் ஈடுபட்டால் ஏற்படும் விளைவுகள் பற்றி ஒவ்வோர் இளைஞனும் கட்டாயம் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு புத்தகம்.இளைஞர்கள் மத்தியில் குற்றச் செயல்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இதுபோன்ற புத்தகங்கள் தொடர்ந்து வெளியிடப்பட வேண்டும்” என்றும்  அவர் கேட்டுக் கொண்டார். 

இணைப் பேராசிரியர் டாக்டர் முகமட் ரஹீம் கமாலுடின் @  ரஹீம் முன்னா நூலாய்வு மேற்கொண்ட இந்நூல்  வெளியீட்டு விழாவை பார்த்திபன், ஜமுனா வேலாயுதம்  இருவரும்  மிகச் சிறப்பாக வழிநடத்தினர்.

 மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்ச்சியில் மஇகா  உதவி தலைவர்கள்,  டத்தோ டி. மோகன்,  டத்தோ  எம்.அசோஜன், கல்வி குழு தலைவர் டத்தோ நெல்சன் ரெங்கநாதன், முன்னாள் சிறை துணை ஆணையர் டாக்டர் கெளசல்யா தேவி சாது,  மலேசிய வேதாத்திரி ஸ்கை மனவளக் கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் இணைப் பேராசிரியர் அருள்நிதி ஆறுமுகம் பாலகிருஷ்ணன், டாக்டர் சண்முக சிவா, டைமன்சன் பதிப்பக உரிமையாளர் கேசவன், பல்வேறு துறைகள் மற்றும் இயக்கங்களின் பொறுப்பாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள்  என அதிகமானோர் கலந்து கொண்டது இந்நூல் வெளியீட்டு விழாவிற்கு மக்கள் வழங்கிய பேராதரவையேப் புலப்படுத்தியது.