spot_img
9.4 C
London
spot_img
Home சமூகம் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி, இலக்கிய அறவாரிய பரிசளிப்பு விழா: சிறுகதைப் பிரிவில் ...

டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி, இலக்கிய அறவாரிய பரிசளிப்பு விழா: சிறுகதைப் பிரிவில் முதல் 3 நிலை வெற்றியாளர்களாக ஆதிலட்சுமி, கிறிஸ்ட் & கலைமதி தேர்வு !

0
268

கோலாலம்பூர், அக்.20-

தேசிய நில நிதி கூட்டுறவு சங்க டான்ஸ்ரீ  கே.ஆர்.சோமா மொழி, இலக்கிய அறவாரியத்தின் சிறுகதை, கவிதை, கட்டுரைப் போட்டிகளின் 31 ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

இதில் சிறுகதை பொது  பிரிவில் முதல் பரிசை கிள்ளானைச் சேர்ந்த ஆதிலட்சுமி பெருமாள் வென்ற வேளையில்  இரண்டாம் பரிசை ரவாங், கிறிஸ்ட் சின்னப்பனும் மூன்றாம் பரிசை பேராக், சித்தியவானைச் சேர்ந்த கலைமதி ரமேஷும் வென்றனர்.

இப்பிரிவில் முனுசாமி கன்னியப்பன், அண்ணாமலை சவரிமுத்து மற்றும் கஸ்தூரிபாய் கோவிந்தசாமி ஆகியோர் ஆறுதல் பரிசுகளைப் பெற்றனர்.

அடுத்து, மரபுக் கவிதைப் பிரிவில்  முதல் பரிசை குமார் துரைராஜூவும் (கிள்ளான்),  இரண்டாம் பரிசை இளமாறன் நாகலிங்கமும் (செலாமா,பேராக்), மூன்றாம் பரிசை தனசேகரன் கோரக்கியும் (பிறை, பினாங்கு) வாகை சூடினர்.

சரவணன் இராமச்சந்திரன், தனசேகரன் ரெங்கசாமி மற்றும் சுப்ரமணியம் பெருமாள் ஆகிய மூவர் இப்பிரிவின் ஆறுதல் பரிசு வெற்றியாளர்களாகத் தேர்வு பெற்றனர்.

விஸ்மா துன் சம்பந்தன், டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா அரங்கில் நடைபெற்ற இந்தப் பரிசளிப்பு விழாவில் கட்டுரைப் பிரிவில் முதல் மூன்று பரிசுகளை முறையே லூனாஸ், கெடா குமரசாமி தண்ணீர்மலை, சிரம்பான் கோவிந்தராஜூ சின்னசாமி மற்றும் காஜாங் குமரவேலு ராமசாமி ஆகியோர் தட்டிச் சென்றனர்.

ஆறுதல் பரிசுகள் பட்டியலில் ஷரன் சுக்லாம் ஆத்மலிங்கம் தஞ்சோங் மாலிம்), பத்மாவதி முருகேசு (பந்திங்)  மற்றும் முத்தரசு ராமசாமி (கோலாலம்பூர்) ஆகியோர் இடம்  பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து மாணவர் பிரிவுக்கான சிறுகதைப் போட்டியில் தஞ்சோங் மாலிம் மெதடிஸ்ட் இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த திவ்யா நடராஜா, தீபிகா லட்சுமி இருவரும் முதலாவது, இரண்டாவது பரிசைப் பெற்ற வேளையில் துன் ஹுசேன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தேவராஜ் அரசன் மூன்றாவது வெற்றியாளராகத் தேர்வானார்.

தேவராஜ் மாதவன்,யுவனேஸ்வரி  சீனிவாசன் மற்றும் கனகேஸ்வரன் குமரன் ஆகிய மாணவர்கள் ஆறுதல் பரிசுக்குத் தேர்வாயினர்.

இறுதியாக, புதுக் கவிதைப் பிரிவில் கெடா, பாடாங் செராயைச் சேர்ந்த உதயகுமாரன் கந்தசாமி முதல் பரிசையும், பினாங்கு , பிறையைச் சேர்ந்த ஜெயலெஷ்மி மாணிக்கம் இரண்டாவது பரிசையும் இதே பகுதியைச் சேர்ந்த புஷ்பா அர்ஜூணன் மூன்றாம் பரிசையும் வென்றனர்.

இப்பிரிவில் மாலினி மருதமுத்து, மோகனதாஸ் ராமசாமி, மணிமாறன் கோவிந்தராஜ் ஆகியோர் ஆறுதல் பரிசுகளை வென்றனர்,

இப்போட்டி வெற்றியாளர்களுக்கு முதல் பரிசாக 2,500 வெள்ளியும், இரண்டாவது பரிசாக 1,750 வெள்ளியும், மூன்றாவது பரிசாக 1,250 வெள்ளியும்  ஆறுதல் பரிசுகளாக 500 வெள்ளியும் வழங்கப்பட்டது.

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ பி.சகாதேவன் தலைமையில்   இவ்விழா நடைபெற்றது. 

வெற்றியாளர்களுக்கு டத்தோ சகாதேவன் காசோலைகளை வழங்கிய வேளையில் சங்கத்தின் தலைமை நிர்வாகி டத்தோ எஸ்.கிளிரத்னராஜ்   இலக்கிய போட்டி விழாவிற்கான தொகுப்பு  நூல்களை  வழங்கினார்.

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வெற்றி பெற்ற படைப்புகளைத் தொகுப்பாக தாங்கள் வெளியிட்டு வருவதாகவும் அவ்வகையில் இம்முறை வெளியிடப்பட்டது ஆறாவது தொகுப்பு நூலாகும்  என்றும் பரிசளிப்பு விழாவிற்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ  சகாதேவன் விவரித்தார்.

இது வளரும் எழுத்தாளர்களுக்கு   ஒரு தூண்டுகோளாக அமையும் .இம்முறை மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் பங்ககேற்றது வரவேற்கத்தக்க வகையில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர்  நாட்டில் இலக்கிய துறையின் வளர்ச்சிக்குத் துணை புரியும் வகையில் வருங்காலங்களில்  மேலும் அதிகமானோர் இப்போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

கரு.பன்னீர்செல்வம் நிகழ்ச்சி நெறியாளராகச் செயல்பட்ட இவ்விழாவிற்கு ” இலக்கியம் காட்டும் தமிழர் மாண்பு “எனும் தலைப்பில் தமிழ் நேசன் முன்னாள் தலைமை ஆசிரியர் முத்தமிழ் வித்தகர் வே.விவேகானந்தன் ஆற்றிய இலக்கிய உரை சிறப்பு சேர்த்தது.