கோலாலம்பூர், ஜன.27-
உடல் பருமன் பல நோய்களுக்கு இட்டுச் செல்கிறது. இதற்கு முறையான உணவு பழக்கம் இல்லாததே காரணம் என்று பிரதமரின் அரசியல் செயலாளர் டத்தோ அஸ்மான் அபிடின் தெரிவித்தார்.
சம சத்துள்ள உணவு வகைகளை உண்ணுதல், உடற்பயிற்சி செய்தல் போன்றவற்றைக் கடைபிடிப்பதன் வழி மக்கள் தங்கள் உடல் ஆரோக்கியம் மீது அதிக கவனம் செலுத்துவது அவசியம் என்றார் அவர்.
உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு உணவு முறையும் உடற்பயிற்சி முறையும் மிக முக்கியம். வேலை பரபரப்புக்கு மத்தியில் இவ்விரு விவகாரங்களை மக்கள் கட்டாயம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று இங்குள்ள செராஸ் மறுவாழ்வு மருத்துவமனையில் ‘ஜோம் செஹாட் மடானி’ மருத்துவ முகாமை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடத்தில் அவர் பேசினார்.

செராஸ் மறுவாழ்வு மருத்துவமனையின் செயல்பாடுகள் பற்றி இவ்வட்டார மக்கள் பலர் இன்னும் அறிந்திருக்கவில்லை. இதனைப் பற்றி என்றி லாயைத் தலைவராகக் கொண்ட இந்த மருத்துவமனையின் வருகையாளர் ஆலோசனை வாரியமும் இம்மருத்துவமனையும் கூட்டாக ஏற்பாடு செய்த இந்த மருத்துவ முகாம் வழி அவர்கள் முழுமையாகத் தெரிந்து கொள்ளலாம் என்றார்.
இதனிடையே, பக்கவாதம், முதுகு தண்டு பிரச்சனை போன்றவற்றால் நடக்க இயலாதவர்களுக்கு உரிய சிகிச்சையும் பயிற்சியும் இந்த மருத்துவமனையில் அளிக்கப்படும். இவற்றின் வழி இவர்கள் உடல் நலம் தேறி வரலாம் என்று கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசம் மற்றும் புத்ராஜெயா சுகாதார துறை இயக்குனர் டாக்டர் நோர் அய்ஷா அபு பாக்கார் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் நோயாளிகளுக்கு வசதியாக செராஸ் மறுவாழ்வு மருத்துவமனைக்கு சாதனங்கள், மடிக்கணினி மற்றும் இதர வகையான உதவிகள் வழங்கிய மலேசிய இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஜவாஹார் அலி, அங்கிள் கெந்தாங் மற்றும் பல இயக்கங்களின் பொறுப்பாளர்களுக்கு அஸ்மான் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தார்.




