பெட்டாலிங் ஜெயா, ஜன.30-
பெருநாள் காலங்களில் நெடுஞ்சாலையில் பயணிப்பவர்கள் தங்களின் பயணங்களைத் திட்டமிடுவதற்கு ஏதுவாக மை பிளஸ் டி.டி.ஏ. செயலியை பிளஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருப்பதாக பொதுப்பணி துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்ஸாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
இச்செயலி போக்குவரத்து நெரிசலின் ஆபத்துகளைக் குறைத்து பயனீட்டாளர்களின் பயண சௌகரியத்தை அதிகரிப்பது மட்டுமின்றி போக்குவரத்து முறையை மேம்படுத்துவதற்கும் உதவியாய் இருக்கும்.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இப்புதிய திட்டம் துரிதமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப டிஜிட்டல் அணுகுமுறையைக் கையாள வகை செய்யும்.
விடுமுறை காலங்களில் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்ய விரும்புவர்கள் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க சரியான நேரம் எது என்பதைத் தெரிந்து கொள்ள இந்த மை பிளஸ் டி.டி.ஏ. செயலி ஒரு வழிகாட்டியாகச் செயல்படும் என்று பெர்சாடா பிளஸ் கோபுரத்தில் இச்செயலியின் அறிமுக விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் காபிட் நாடாளுமன்ற உறுப்பினருமான அலெக்ஸாண்டர் நந்தா பேசினார்.
-அஸ்ட்ரோ அவானி




