உலு சிலாங்கூர், ஏப்.26-
இந்தியர்களின் சமூகநலன் குறித்துத் தவறாகச் சித்தரித்து அவதூறு பரப்புபவர்களை கோல குபு பாரு இந்திய வாக்காளர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோ ரமணன் கேட்டுக் கொண்டார்.
இம்மாதிரியான சூழ்நிலை பொதுவாக நாட்டில் தேர்தல் நடைபெறும் காலங்களில் ஏற்படுவதுண்டு.
தேர்தல் பிரச்சார காலத்தில் இந்திய தலைவர்கள் நல்ல அரசியல் முதிர்ச்சியோடு துல்லிதமான தகவல்களை வாக்காளர்களுக்கு வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

“இந்த நிலை திரும்பத் திரும்ப ஏற்படுவதால் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. இவர்கள் பரப்பும் அவதூறுகள் குழப்பமான சூழலை உருவாக்கி நிலைமையை மேலும் மோசமாக்கி விடுகிறது” என்றார்.
இது இந்தியர்களுக்கு மட்டுமின்றி மற்ற இன மக்களுக்கும் இழப்புகளை ஏற்படுத்தும் என்பதால் இவர்கள் பயன்மிக்க ஒரு விவகாரத்தை மையப்படுத்தி அனைத்து சமூக மக்களுக்கும் நன்மை பயக்க வேண்டும் என்று மலேசிய இந்திய பொருளாதார உருமாற்றப் பிரிவின் (மித்ரா) சிறப்பு பணிக்குழு மற்றும் கோல குபு பாரு இந்தியர்களுடனான சந்திப்பில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன் பேசினார்.





