spot_img
14.9 C
London
spot_img
Home கலை உலகம் மங்கை நீ தொடர்: கதாபாத்திரங்களுடன் நேர்காணல்

மங்கை நீ தொடர்: கதாபாத்திரங்களுடன் நேர்காணல்

0
330

கோலாலாம்பூர், மே 4-

மங்கை நீ தொடர் அத்தியாயம் 4, 5இல் நடித்த நடிகர்களுடன் நடத்தப்பட்ட நேர்காணலை இங்கு காண்போம்.

அத்தியாயம் 4: தினாஷினி, சாந்தினி சந்திர போஸ் & டேவிட் ஆண்டனி, நடிகர்கள்:

அத்தியாயம் 5: நித்யஸ்ரீ & தியா லக்ஷனா, நடிகர்கள்:

  1. மங்கை நீ தொடரில் நீங்கள் வகித்தக் கதாபாத்திரத்தைப் பற்றி எங்களிடம் கூறுங்கள்.

தினாஷினி: உருவ கேலியால் பாதிக்கப்படும் லாவண்யா கதாபாத்திரத்தில் நான் நடித்தேன். இதுபோன்ற தலைப்புகளைக் கலைப்படைப்புகளில் சித்தரிப்பது அதில் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு புரிந்துகொள்ளவும் உதவுகிறது. சமூக ஊடகங்கள் மூலமாகவோ அல்லது அவர்களின் சமூக வட்டாரங்களிலோ தங்கள் தோற்றத்தைப் பற்றிய வேதனைக்குரிய கருத்துகளைப் பெறுவது உட்பட பல்வேறு வழிகளில் உருவ கேலிக்கு மக்கள் ஆளாகின்றனர். மனம் மற்றும் உணர்ச்சி ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு குறைந்த சுயமரியாதை, மனச்சோர்வு மற்றும் பதட்டத்திற்கு இது வித்திடுகிறது.

சாந்தினி: ‘நம்பிக்கை’ அத்தியாயத்தில் சுவாதி கதாப்பத்திரத்தில் நடித்தேன். 3ஆம் ஆண்டு உளவியல் மாணவியான சுவாதி, லாவண்யாவைத் தற்செயலாகச் சந்திக்கிறாள். தனது எடையின் காரணமாக லாவண்யா ஒரு தாழ்வு மனப்பான்மையில் இருப்பதைச் சுவாதி உணர்ந்தாள். அவர்களைப் போன்ற பாதுகாப்பின்மை பயத்தை நான் எதிர்கொண்டதால் சுவாதி மற்றும் லாவண்யா இருவரையும் என்னால் எளிதாகத் தொடர்புப்படுத்த முடியும்.

டேவிட்: தன் உடல் எடையைக் குறைக்கத் தன்னால் இயன்றவரை முயற்சி செய்து, வாழ்க்கையில் எண்ணற்றச் சவால்களை எதிர்கொள்ளும் ஒரு பெண்ணின் தந்தையாக நடித்தது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமானத் தருணமாக இருந்தது. நிஜ வாழ்க்கையில் ஒரு மகளைப் பெற வேண்டும் என்பது எனது விருப்பம். இருப்பினும், இரண்டு ஆண் குழந்தைகளை இறைவன் ஆசீர்வதித்தார். பெரும்பாலான தொடர் அல்லது திரைப்படங்களில் மகன்களுக்கு அப்பாவாக நடிப்பது வழக்கம். ஒரு மகளுடன் பயணிப்பதோடு அவள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும் அவளுடைய பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளவும் அனுமதித்ததால் இந்த தொடர் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது.

நித்யஸ்ரீ: இதுவரை நான் நடித்ததில் கவிதா ஒரு வித்தியாசமான கதாபாத்திரம். தன்னை விட மற்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தனித்து வாழும் தாய் மற்றும் சுயாதீன பெண், கவிதா. பல சாயல்களைக் கொண்ட தொழிலுக்கு முக்கியத்துவம் வழங்கும் தனித்து வாழும் தாய் என்ற பாத்திரம் என்பதால் சற்று சவாலாக இருந்தது. இருப்பினும், அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க மிகவும் ஆவலாக இருந்தேன். இன்றைய காலத்திலும் ஃபேஷன் பாணி, பேச்சு, தொழில் போன்றவற்றின் அடிப்படையில் பெண்கள் எளிதில் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறார்கள். ஆனால் கவிதா சுயமரியாதையுடன் தனக்கு முக்கியத்துவம் வழங்குவதன் மூலம் மற்றவர்களையும் அவ்வாறு செய்ய ஊக்குவிப்பவர். கவிதா கதாப்பாத்திரம் பல பெண்களை ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்.

தியா: ‘உன்னாலே’ அத்தியாயத்தில் மாதவியாக நடித்தேன். இல்லத்தரசியாகவும் ஒரு பெண்ணுக்குத் தாயாகவும் இருக்கும் மாதவி, அக்கறையுள்ளவர், பொறுப்பானவர் மற்றும் அன்பானவர். நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு கணவரை ஆழமாக நம்பவும் நேசிக்கவும் செய்தார். திருமணமானவுடன் முழு வாழ்க்கையையும் குடும்பத்துக்காக அர்ப்பணித்துப் பல விஷயங்களைத் தியாகம் செய்யும் மாதவியுடன் ஏராளமான பெண்கள் எளிதில் தொடர்புப்படுத்த முடியும். மாதவியைப் போல் குறிப்பிடத்தக்கக் குணம் கொண்ட பெண்களைப் பிரதிநிதிக்கும் கதாபாத்திரத்தில் நடிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

  • மங்கை நீ தொடரில் நடித்த அனுபவம் எவ்வாறு இருந்தது?

தினாஷினி: ‘நம்பிக்கை’ அத்தியாயத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்ததைத் தொடர்ந்து முதன்மை கதாபாத்திரத்தில் என்னை சித்தரித்த இரண்டாவது கலைப் படைப்பு மங்கை நீ தொடர். ஆராய்ந்து தெரிந்து கொள்ள உணர்ச்சிகரமான மற்றும் வியக்கத்தக்கக் கூறுகள் லாவண்யா கதாபாத்திரத்தில் நிரம்பி இருந்ததால் நடிக்க மிகவும் உற்சாகமாகவும் அதே வேளையில் சவாலாகவும் இருந்தது. இந்த வாய்ப்பு ஒரு நடிகையாக வளர என்னை அனுமதித்ததோடு உருவ கேலியைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு பொன்னான வாய்ப்பை வழங்கியது. எனக்கு அளித்த அற்புதமான வாய்ப்பிற்காக டத்தின் ஷைலா மற்றும் இயக்குநர் யுவராஜ் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கைக்கு நான் நன்றிக் கடன்பட்டுள்ளேன் என்றால் அது மிகையாகாது. படப்பிடிப்பு முழுவதும் என்னை வழிநடத்தி நன்றாக கவனித்துக் கொண்ட உதவி இயக்குநர்களான திரு.அருண், திரு.கபில் மற்றும் ஷர்மினி ஆகியோருக்கு இவ்வேளையில் நன்றிக் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

சாந்தினி: மங்கை நீ தொடர் குழுவுடன் பணிபுரிந்தது மிகவும் குறுகிய கால கட்டமாக இருத்தாலும் ஒரு சிறந்த அனுபவமாக எனக்கு இருந்தது. யுவராஜ் இயக்கத்தில் பணியாற்றியது இதுவே முதன்முறை. இருப்பினும் முந்தைய கலைப் படைப்புகளினால் ஏற்கனவே ஏற்பட்ட நல்லுறவு காரணமாக அவருடன் பணிபுரிந்தது மிகவும் எளிதாக இருந்தது. அருண் குமரன், ஷர்மினி, கபில் உள்ளிட்ட துணை இயக்குநர்களின் அற்புதமான பணியையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இதுபோன்ற ஒரு படைப்பிற்குச் சிறந்த ஆதரவாகவும் ஆணிவேராகவும் இருந்த தயாரிப்பாளர் டத்தின் ஷைலாவுக்கு என் இதயங்கனிந்த நன்றியைக் கூறிக் கொள்ள விருப்புகிறேன்.

டேவிட்: தயாரிப்பாளர் டத்தின் ஸ்ரீ ஷைலா வி, இயக்குநர் யுவராஜ் மற்றும் திறமையான கலைஞர்களுடன் பணிபுரிந்த ஒவ்வொரு தருணமும் எனக்கு மறக்க முடியாத ஓர் அனுபவமாகும். மேலும், பெண்களுக்கு அதிகாரமளிக்கும் கருப்பொருளைச் சார்ந்த தொடரில் நான் பணியாற்றியது இதுவே முதல் முறை.

நித்யஸ்ரீ: ஷைபா விஷன் மற்றும் இயக்குநர் யுவராஜ் ஆகியோருடன் பணிபுரிந்தது இதுவே முதல்முறை. நான் பதட்டத்துடன் படப்பிடிப்பு இடத்திற்குச் சென்றேன். ஆனால் முதல் கட்டப் படப்பிடிப்புக்குப் பிறகு பயங்கள் யாவும் மறைந்தன. படப்பிடிப்பின் போது நான் எவ்வகையான பாணியைச் சித்தரிக்க வேண்டும் என்பதில் இயக்குநர் மிகவும் கவனமாக இருந்தார். நடிகர்களிடமிருந்து வரும் கேள்விகளுக்குப் பொறுமையாகவும் விளக்கம் அளித்தார். பெண்களை ஊக்குவிக்கும் வகையிலான ஒரு கதையை ஓர் ஆண் இயக்குநர் எழுதியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கவிதாவின் கதாபாத்திரத்தைச் சித்தரிப்பதில் டத்தின்ஸ்ரீ ஷைலா வி எனக்குப் பெரிதும் உதவினார். உணர்ச்சிகரமான காட்சிப் படமாக்கப்பட்டத் தருணம் உட்பட ஒவ்வொரு நாளும் அவர் என்னை வழிநடத்தினார். அதுமட்டுமின்றி, ஒட்டுமொத்தக் குழுவும் மிகவும் நட்புணர்வுடன் பழகினர். எனவே அவர்களுடன் பணியாற்றியது மிகவும் வேடிக்கையாக இருந்தது.

தியா: இக்குழுவினருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். அவர்கள் ஒவ்வொருவரும் தொழில்முறை அணுகுமுறையைக் கடைப்பிடித்தனர். நான் சிறப்பாக நடிக்க, கதாபாத்திரத்தை உள்வாங்கவும் புரிந்துகொள்ளவும் இயக்குநர் யுவராஜ் எனக்கு பெரிதும் உதவினார். இத்தொடரின் ஓர் அங்கமாக என்னை தேர்ந்தெடுத்ததற்கு டத்தின் ஷைலாவுக்கு நன்றி தெரிவிக்க விருப்புகிறேன். படப்பிடிப்பு முழுவதும் அவர் அளித்த ஆதரவும் ஊக்கமும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நடிகராக இது என்னுடைய முதல் தொடர். இத்தகைய திறமையான தயாரிப்பு நிறுவனம் மற்றும் குழுவுடன் மீண்டும் பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்.