spot_img
8.8 C
London
spot_img
Home சமூகம் காலத்தை வென்ற கவிஞர் கண்ணதாசன்! -டத்தோஸ்ரீ சரவணன்

காலத்தை வென்ற கவிஞர் கண்ணதாசன்! -டத்தோஸ்ரீ சரவணன்

0
178

கோலாலம்பூர்- ஜூன் 24-

காலத்தை வென்ற கவிஞர் கண்ணதாசன் என்று மஇகா தேசிய துணைத் தலைவரும் கண்ணதாசன் அறவாரியத்தின் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் வர்ணித்தார்.

நான் நிரந்தரமானவன். அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்பதற்கொப்ப கண்ணதாசன் இன்னமும் நம்மோடு வாழ்ந்து வருகிறார்.

கண்ணதாசன் வாழும் போது அவரை போற்றினார்களோ இல்லையோ, ஆனால் இன்று அவரின் ஆற்றலையும் அவரின் தமிழ் புலமையையும் மக்கள் புகழ்ந்து கொண்டாடி வருகின்றனர்.

அதே வேளையில், அவரின் கவிதைகளும் பாடல்களும் எந்த காலத்திலும் அழியாத தன்மை பெற்றவை.

எல்லா காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு அவை உள்ளன. இதை யாராலும் மறுக்க முடியாது.

அவ்வகையில் 49ஆவது ஆண்டாக கண்ணதாசன் விழா கோலாலம்பூரில் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

எதிர்பார்த்ததை விட அதிகமானோர் இந்த கண்ணதாசன் விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

குறிப்பாக அதிகமான இளைஞர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது என்று இவ்விழாவின்போது நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் பேசினார்.

இளைஞர்கள் நல்ல தமிழைக் கேட்க விரும்புகின்றனர். இதன் காரணமாகவே கண்ணதாசன் விழாவில் பங்கேற்கும் இளைஞர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக அவர் கூறினார்.

அதே வேளையில், நல்ல செய்தியை கொண்டு சேர்த்தால் அடுத்த தலைமுறை சரியாக வளரும்.

இதன் அடிப்படையில்தான் கண்ணதாசன் விழாவை அறவாரியம் தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. வரும் ஆண்டுகளிலும் இது தொடரும் என்றார்.

இதனிடையே இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அங்கமாக தமிழ் ஆர்வலர்கள், கலைஞர்கள் என ஐவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

எழுத்தாளரும் தமிழ் ஆர்வலருமான முரசு நெடுமாறன், கலைமாமணி கலைவாணி, நாட்டின் புகழ்ப்பெற்ற பாடகர்களான எம்.எஸ்.பிரிட்டோ, தண்டபாணி, டத்தின்ஸ்ரீ கோமதி தெய்வீகன் ஆகியோரே அந்த ஐவர்.

இவர்களை டத்தோஸ்ரீ சரவணன் பொன்னாடை மற்றும் விருது வழங்கி கௌரவித்தார்.

கண்ணதாசன் விழாவின் வெற்றிக்காகப் பாடுபட்ட ஏற்பாட்டு குழுவினரை நிகழ்ச்சியில் உரையாற்றிய போது சரவணன் பாராட்டினார்.