தம்புன், ஜூலை 8-
இந்தியர்களின் சமுகப் பொருளாதார தரத்தை உயர்த்துவதற்காக ஒருசில கூடுதல் ஒதுக்கீடுகள் வழங்கப்படுவது ஒற்றுமை அரசாங்கம் அச்சமூகத்தை புறக்கணிக்கவில்லை என்பதற்கான சான்றாகும்.
மித்ராவுக்கு இதற்கு முன்பு வெ.100 மில்லியன் அரசாங்கம் வழங்கியிருப்பதோடு தெக்குன் கடனுதவி திட்டம், அமானா இக்தியார் மலேசியா ஆகியவற்றுக்கும் வெ.50 மில்லியன் தொகையை வழங்கியுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
“இந்திய சமூகத்தின் பிரதிநிதிகள் என்னிடம் கலந்துரையாடினால் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க நான் முயற்சி செய்வேன். மித்ராவில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக ஒரு சிலர் கூறுவது சரியல்ல, காரணம் மித்ராவுக்கு மட்டும் வெ.100 மில்லியனை அரசாங்கம் வழங்கியுள்ளது” என்றார்.
சிறு வணிகர்களுக்கான தெக்குன் திட்டத்திற்கு வெ.50 மில்லியனை அரசாங்கம் அதிகரித்துள்ளதைப் போல் அமானா இக்தியாரிலும் வெ.50 மில்லியனை இந்திய சமூகத்திற்காக அரசாங்கம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இந்திய சமூகம் தொடர்பில் கருத்தில் கொள்ளாமல் இருப்பதாகக் கூறப்படுவது சரியல்ல என்று தம்புன் நாடாளுமன்ற இந்திய சமூகத்தினருடனான ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் உரையாற்றிய போது அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வார் பேசினார்.
-எப்.எம்.டி.





