கோலாலம்பூர், ஜூலை 24 –
பள்ளிகளுக்கு மதுபானம், சிகரெட் மற்றும் சூதாட்ட நிறுவனங்கள் நன்கொடை வழங்குவதற்குத் தடை விதிக்கப்பட வேண்டும் என்ற அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் அக்மால் சாலேயின் கருத்துக்கு மஇகா மகளிர் பிரிவின் தலைவி சரஸ்வதி நல்லதம்பி ஆதரவு தெரிவித்தார் .
பள்ளிகளுக்கான நன்கொடை வழிகாட்டியில் எந்தவொரு விலக்களிப்பும் வழங்கப்படமாட்டாது. சிகரெட் மற்றும் மதுபான நிறுவனங்களிடமிருந்து நன்கொடை பெறுவது மீதான வழிகாட்டியை மறு ஆய்வு செய்வது அல்லது விலக்களிப்பு வழங்கப்படுவதற்கு அறவே இடமில்லை என்று கல்வி அமைச்சர் பாட்லினா சிடேக் திட்டவட்டமாகக் கூறியுள்ளார் .
இதுபோன்ற நிறுவனங்களின் நன்கொடை மாணவர்களின் அறிவு மற்றும் மன உணர்வுகளைப் பாதிக்கும் என்பதால் இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கல்வி அமைச்சு கூறியிருந்தது . ஆகையால் அமைச்சின் வழிகாட்டியை பள்ளிகள் அவசியம் பின்பற்ற வேண்டும் என்று கெமிலா சட்டமன்ற உறுப்பினருமான சரஸ்வதி அறிக்கை ஒன்றின் வழி வலியுறுத்தினார் .
இதன் விதிமுறைகளில் திருத்தங்கள் ஏற்படுத்தும்படி சில தரப்பினர் கூறினாலும் பள்ளிகளுக்கு மதுபானம், சிகரெட் மற்றும் சூதாட்ட நிறுவனங்கள் நன்கொடை வழங்குவதற்கு விதிக்கப்பட்ட தடையை அரசாங்கம் தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார் .


