காஜாங்,ஜன. 3-
மாணவர்களின் கல்வி மேம்பாடு மற்றும் மக்களின் சமூக நலன் ஆகிய விவகாரங்களில் கவனம் செலுத்துவதே தனது தலையாய நோக்கமாக இருக்கும் என்று சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட டாக்டர் எம். சுரேந்திரன் வலியுறுத்தினார்.
“அனைவருக்கும் சரிசமமான கல்வி வழங்கப்பட வேண்டும் என்பது பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோக பால மோகனின் உறுதியான கொள்கையாகும். இதன் அடிப்படையில் மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்தத் திட்டமிட்டிருக்கிறேன்” என்றார் சுரேந்திரன்.
தகுதி பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்வி கழகங்களில் இடம் கிடைப்பதை உறுதிப்படுத்துவதும் இதில் அடங்கும் என்று மாநில பிபிபி தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர் தான் ஆற்றவிருக்கும் பணிகள் குறித்து அநேகனிடம் விவரித்தார்.
“இன வேறுபாடு பாராது அனைத்து இனத்தவரின் தேவைகளையும் பூர்த்தி செய்வதே எங்களின் நோக்கமாகும். இதற்காக மாநில அலுவலகத்தில் சேவை மையத்தைத் தொடங்கியுள்ளோம். புதன் மற்றும் சனிக்கிழமைகளில் மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்னைகளைக் கேட்டறிந்து வருகிறோம்” என்றார்.
“சிவப்பு அடையாளக் கார்டு வைத்திருந்த பெண்மணிக்கு நீல அடையாளக் கார்டைப் பெற்றுத் தந்ததும் எங்கள் குழுவின் சமூக பணிகளில் குறிப்பிடத்தக்கதாகும்”
இதே போன்ற சிக்கலை எதிர்நோக்கியிருக்கும் மேலும் சிலருக்கும் தாங்கள் உதவவிருப்பதாக அவர் மேலும் சொன்னார்.
கட்சியின் மறுமலர்ச்சி நடவடிக்கைகள் பல இளைஞர்களை பிபிபியின் பால் ஈர்த்துள்ளது. இதன் வழி உறுப்பினர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. இது கட்சிக்கு வலு சேர்த்துள்ளது.
ஒற்றுமை அரசாங்கத்திற்கு பிளவுபடாத ஆதரவை நாங்கள் நிச்சயம் வழங்குவோம். அதன் நடவடிக்கைகளுக்கு என்றும் தோள் கொடுப்போம் என்றார் சுரேந்திரன்.
“என் மீது நம்பிக்கை வைத்து சிலாங்கூர் மாநில பிபிபி தலைவராக என்னை நியமித்திருக்கும் டத்தோ லோக பால மோகனுக்கு இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்”என்றார் அவர்.


