பத்தாங் காலி, மார்ச் 1-சிலாங்கூர் இந்திய சமூக மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு இலாகா (ஐ-சீட்) வாயிலாக உலு சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள 25 வணிகர்களுக்கு சுமார் 1லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இங்குள்ள பொது மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு வர்த்தக உபகரணங்களை சம்பந்தப்பட்ட வணிகர்களிடம் ஒப்படைத்தார்.
இம்மாநில இந்திய சிறு வணிகர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதே ஐ-சீட் எனப்படும் சிலாங்கூர் இந்திய சமூக மற்றும்தொழில் முனைவோர் மேம்பாட்டு இலாகா.
இதன் கீழ் உலு சிலாங்கூர் மாவட்டத்தில் 25 பேருக்கு இன்று வர்த்தக உபகரணங்கள் வழங்கப்பட்டதாக இவற்றை ஒப்படைக்கும் நிகழ்ச்சிக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் பேசினார்.
உணவு, கார் கழுவும் துறை, தையல், காய்கறி தோட்டம், அழகு கலை, சிகை அலங்காரம், பூஜை பொருட்கள், புகைப்படம், மேடை அலங்காரம், மளிகைக் கடை, மோட்டார் சைக்கிள் பழுதுபார்ப்பு மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் விண்ணப்பம் செய்தவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதாக பாப்பாராய்டு விவரித்தார்.
கடந்த ஆண்டுக்கான மாவட்ட விண்ணப்பங்களில் இன்னும் உபகரணங்கள் ஒப்படைக்கப்படாத ஒரே ஒரு மாவட்டமாக உலு லங்காட் திகழ்கிறது. தகுதி பெற்ற இதன் வணிகர்களுக்கான உபகரணங்கள் இம்மாதம் 9ஆம் தேதி ஒப்படைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
“தங்களின் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்ட இந்த உபகரணங்களை வணிகர்கள் மற்றவர்களுக்கு விற்கக் கூடாது” என்று பாப்பாராய்டு வலியுறுத்தினார்.
இதனிடையே, தங்களுக்கு வாக்களித்தபடியே இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டிருப்பது அதிக மகிழ்ச்சியைத் தருவதாக சிகை அலங்கார வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் செண்பக வள்ளி த/ பெ முனுசாமி குறிப்பிட்டார்.

“எனக்கு சிகை அலங்கார நாற்காலி, நீராவி சாதனம் போன்ற சாதனங்கள் கிடைத்துள்ளன. இந்த சாதனங்கள் எனது வியாபாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கு பெரும் உதவியாக இருக்கும். இந்த வேளையில் சிலாங்கூர் மந்திரி பெசார் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் “என்றார் செண்பக வள்ளி.
தனக்கு முக அலங்காரத்திற்கான படுக்கை, நாற்காலி, 2 செட் கண்ணாடி, நீராவி சாதனம் போன்ற உபகரணங்கள் வழங்கப்பட்டது தனக்கு தனி உற்சாகத்தை ஏற்படுத்தியிருப்பதாக நித்திய கல்யாணி த/பெ நாராயணசாமி குறிப்பிட்டார்.

“இவை வர்த்தகத்தை இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை எனக்குள் ஏற்படுத்தியிருக்கிறது. இதற்காக மாநில அரசாங்கத்திற்கு நன்றி”என்றார்.
பழைய புல் வெட்டும் இயந்திரம் அடிக்கடி பழுதாகிறது. இப்போது எனக்குப் புதிய இயந்திரம் கிடைத்துள்ளது. இதை வைத்து எனது தொழிலை இன்னும் நல்ல முறையில் செய்வேன் என்றார் நாச்சிமுத்து த/பெ கோபால் (74)

தனக்கு இந்நிகழ்ச்சியில் காமிரா வழங்கப்பட்டதாகவும் இதை வைத்து நிகழ்ச்சிகளில் நல்ல புகைப்படங்கள் எடுத்து வருமானத்தை ஈட்டலாம் என்றும் யுவராஜ் த/பெ முரளி விவரித்தார் .
இந்நிகழ்ச்சியில் கோல குபுபாரு சட்டமன்ற உறுப்பினர் பாங் சோக் தாவ், உலு சிலாங்கூர் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


