தம்புன், ஜூலை 14 –
தம்புன் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியர்களின் மேம்பாட்டில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிக அக்கறை காட்டி வருவதாக இத்தொகுதி உறுப்பினரின் சிறப்பு அதிகாரி டத்தோ ஆர். சுரேஸ்குமார் தெரிவித்தார்.
அவ்வகையில் இவ்வட்டாரத்தில் உள்ள ஆலயங்கள், தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
டத்தோஸ்ரீ அன்வாரின் வெற்றிக்கு இந்திய வாக்காளர்கள் பெரும் ஆதரவு வழங்கியுள்ளனர்.
ஆகையால், இங்கு இந்தியர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பிரதமர் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகச் சொன்னார் .
தம்புன் நாடாளுமன்ற உறுப்பினரான அன்வார் இந்தியர்கள் உட்பட இத்தொகுதி மக்களுக்காக பல சமூக நலத்திட்டங்களை மேற்கொண்டு வருவதை சுரேஸ்குமார் சுட்டிக் காட்டினார்.
இங்குள்ள தஞ்சோங் ரம்புத்தான் சமயபுர மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற 47 ஆவது திருமுறை ஓதும் போட்டியை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதனிடையே, இவ்வட்டார மாணவர்களுக்காக ஆண்டு தோறும் நடத்தப்படும் திருமுறை ஓதும் விழாவில் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தவண்ணம் இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தஞ்சோங் ரம்புத்தான் இந்து சங்கத் தலைவர் சந்திரன் கூறினார்.
பெற்றோர்களின் ஆதரவும், ஊக்குவிப்புமே இதற்கு அடிப்படைக் காரணங்கள் என்றார்.
அதே வேளையில், சமய நிகழ்வுகளில் பொது மக்களின் பங்களிப்பும் மனநிறைவைத் தருவதாக அவர் சொன்னார்.
இந்த விழாவில் சமய வளர்ச்சிக்குப் பாடுபட்டு வரும் சேவையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
திருமுறை ஓதும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.


