கோலாலம்பூர், ஆக.29-
மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 62 ஆம் ஆண்டு பொதுக் கூட்டமும் விருதளிப்பு விழாவும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன் முன்னிலையில் வரும் 7.9.2025 காலை 9.30 மணிக்கு கோலாலம்பூர், ஜாலான் ஈப்போவில் உள்ள விஸ்மா கே.கே.பி.யில் நடைபெறும்.
இந்த விருதளிப்பு விழாவில் வழக்கம் போல மலேசியத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் சங்கத்தின் செயல் திட்டங்களுக்கும் பங்காற்றிய நான்கு எழுத்தாளர்களுக்கு தங்கப்பதக்கம் அணிவித்து சிறப்பு செய்யப்படும்.
இந்தாண்டு பொன்.கோகிலம் “முத்தமிழ் வித்தகர் முருகு.சுப்ரமணியம்” விருது பெறுகிறார்.
கிள்ளான் நடராஜன் ஆதிமூலம் “செந்தமிழ்ச் செல்வர் சி.வி. குப்புசாமி” விருது பெறுகிறார்.
“சமூகக் கலை மாமணி அன்பானந்தன்” விருதை ஆசிரியை திருமதி நிர்மலாதேவி பன்னீர்செல்வம் பெறுகிறார்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் “இலக்கியச் செம்மல் முனைவர் ரெ.கார்த்திகேசு” விருது சரண் சுக்லாம் ஆத்மலிங்கம்@ விண்ணமுதன் ஆத்மலிங்கம் பெறுகிறார்.
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் கடந்த ஓராண்டில் பல புதிய முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது.
ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ் செயல் படும் தேசிய ஆவணக்காப்பகத்தின் அங்கீகாரம், தேசிய நூலகத்துடன் அனுக்கமான உறவு வலுப்படுத்தியுள்ளது.
கல்வியமைச்சின் கீழ் இயங்கும் டேவான் பஹாசா டான் புஸ்தாகாவுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.
கூட்டரசுப் பிரதேச அமைச்சின் கீழ் இயங்கும் மாநகர் மன்றத்தின் நூலகத்தில் தமிழ் நூல்கள் வைப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு யுகத்தில் தமிழ் எழுத்தாளர்கள் கருத்தரங்கு, இளையோர் படைப்பிலக்கிய கருத்தரங்கு ஆகிவற்றை நடத்தி முடித்த பெருமிதத்துடன் சங்கம் தனது ஆண்டுக்கூட்டத்தை நடத்த உள்ளது.
அதோடு, இந்த ஆண்டுக்கூட்டத்தில், சங்கத்தில் இளைய தலைமுறை உறுப்பினர்களாக சேர்ப்பதற்கான சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும் .
இளைய தலைமுறையினரின் ஆர்வத்தை ஈர்க்கும் வகையில் தேசிய அளவிலான போட்டி நடத்துவதற்கான ஏற்பாடு குறித்தும் இந்த ஆண்டு கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விருதளிப்பு நிகழ்ச்சியில் பொதுமக்களும் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து நடைபெறும் ஆண்டு கூட்டத்தில் உறுப்பினர்கள் கலந்து கொள்ள அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது என்று மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் மோகன் தெரிவித்தார்.


