கோலாலம்பூர்:
வணிக வலையமைப்பு, கல்வி ஆதரவு மற்றும் சமூக விளையாட்டு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, இந்திய சமூகத்திற்கான தனது சமூகப் பங்களிப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் Business Network Partners Resources (BNP) செயல்பட்டு வருவதாக அதன் நிறுவனர் கலிவாணன் தெரிவித்தார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் BNP, தொழில்முனைவோர் மற்றும் வணிகர்களை இணைத்து, வணிக வாய்ப்புகள், பரிந்துரைகள் மற்றும் கூட்டாண்மைகளை உருவாக்குவதுடன், கல்வி மற்றும் சமூக நல நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறினார்.
இதன் தொடர்ச்சியாக, ‘BNP Night of Honour 2026 – Community Appreciation & Education Night’ நிகழ்ச்சி வரும் அக்டோபர் 24ஆம் தேதி, Selayang-இல் உள்ள Shenga Convention Hall-இல் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் இந்திய தொழில்முனைவோர், வணிகர்கள் மற்றும் சமூகத்துக்கு பங்களித்து வரும் நபர்களை அங்கீகரிப்பதுடன், மாணவர்களின் கல்வித் தேவைகளுக்கு உதவும் ‘கல்விக் கரம்’ திட்டமும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
குறிப்பாக, இந்திய மற்றும் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் உண்மையான கல்வித் தேவைகளைக் கண்டறிந்து, பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து கல்வி உபகரணங்கள், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் தேவைக்கேற்ற உதவிகளை வழங்க BNP திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் லோகநாதன் ராமையா தெரிவித்தார்.
மேலும், மூத்தோருக்கான பூப்பந்தாட்ட முயற்சியின் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறை, விளையாட்டு ஒழுக்கம், நட்பு மற்றும் சமூக ஒற்றுமையை ஊக்குவிக்க BNP நடவடிக்கை எடுத்து வருவதாக அதன் ஏற்பாட்டாளர்கள் பாலா மற்றும் ரவி தெரிவித்தனர்.


