ஷா ஆலம், நவம்பர் 23: கோத்தா கெமுனிங் சட்டமன்ற மக்கள் சேவை மையம், MITRAA அமைப்புடன் இணைந்து ஏற்பாடு செய்த 2026ஆம் ஆண்டுக்கான கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி கால்பந்துக் கோப்பைப் போட்டி, கடந்த நவம்பர் 21ஆம் தேதி ஷா ஆலம், செக்ஷன் 17இல் உள்ள JKR விளையாட்டு அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. சுற்றுப்போட்டி முறையில் நடைபெற்ற இப்போட்டியில் ஏழு தொடக்கப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று தங்களது விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் YB பிரகாஸ் சம்புநாதன், மாணவர்களின் ஆர்வம், விளையாட்டு ஒழுக்கம் மற்றும் விடாமுயற்சியைப் பாராட்டினார். மேலும், இப்போட்டி வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நிகழ்ச்சி மட்டுமல்ல; மாணவர்களிடையே ஒழுக்கம், குழு உணர்வு, ஒற்றுமை மற்றும் விளையாட்டு மனப்பான்மையை வளர்க்கும் சிறந்த தளமாகும் என்றும், இளம் தலைமுறையினரின் திறமைகளை வெளிக்கொணர உரிய வாய்ப்புகளும் ஆதரவும் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஒரு நாள் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் ஒவ்வொரு அணியும் தலா ஆறு ஆட்டங்களில் பங்கேற்ற நிலையில், SK Seksyen 27 (1) அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. SK Bukit Kemuning (2) அணி இரண்டாம் இடத்தையும், SK Taman Alam Megah அணி மூன்றாம் இடத்தையும் கைப்பற்றின. தொடர்ந்து SK Taman Sri Muda 2 நான்காம் இடத்தையும், SK Kota Kemuning ஐந்தாம் இடத்தையும், Chinese Taipei School Kuala Lumpur ஆறாம் இடத்தையும், SJK(C) Khe Beng ஏழாம் இடத்தையும் பெற்றன.
இப்போட்டியின் வெற்றிகரமான ஏற்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்கிய MITRAA அமைப்பு, பள்ளி நிர்வாகங்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நடுவர்கள் மற்றும் ஏற்பாட்டுக் குழுவினருக்கு கோத்தா கெமுனிங் சட்டமன்ற மக்கள் சேவை மையம் நன்றியைத் தெரிவித்துக் கொண்டது. இளம் தலைமுறையினரின் விளையாட்டுத் திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு உரிய வாய்ப்புகளையும் ஊக்கத்தையும் தொடர்ந்து வழங்குவதன் மூலம் எதிர்காலத்தில் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க முடியும் என்பதற்கு இப்போட்டி சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது.


