கோலாலம்பூர்:
இந்தியச் சமூகத்தையும் இந்து மதத்தையும் குறிவைத்து முகநூலில் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய பதிவு தொடர்பாக, மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திடம் (MCMC) புகார் அளித்துள்ளதாக மலேசிய இந்துதர்ம மாமன்றத் தலைவர் ரிஷிக்குமார் வடிவேலு தெரிவித்துள்ளார்.
‘Sahabat GARAP’ என்ற முகநூல் கணக்கில் வெளியிடப்பட்ட அந்தப் பதிவில், சட்டவிரோதக் கோயில்களுக்கு எதிரான அடுத்தகட்ட நடவடிக்கையாக இந்தியப் பெண்களைத் திருமணம் செய்து இஸ்லாத்திற்கு மதமாற்றம் செய்வது குறித்த கருத்து இடம்பெற்றுள்ளது.
இந்தியப் பெண்களை இன மற்றும் மத அடிப்படையிலான நோக்கங்களுக்கான கருவிகளாகச் சித்தரிக்கும் இத்தகைய கருத்துகள் கண்டிக்கத்தக்கவை என்று மாமன்றம் தெரிவித்துள்ளது.
திருமணமும் மதமாற்றமும் தனிநபர்களின் விருப்பம், சுதந்திரம் மற்றும் கண்ணியத்துடன் தொடர்புடையவை என்றும், அவற்றை எந்தவொரு இன அல்லது மதச் சமூகத்தையும் அவமதிக்கவும் தூண்டிவிடவும் பயன்படுத்தக் கூடாது என்றும் மாமன்றம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், இந்துக் கோயில்கள் தொடர்பான சட்ட விவகாரங்கள் முறையான சட்ட மற்றும் அரசியலமைப்பு வழிமுறைகளின் மூலம் தீர்க்கப்பட வேண்டுமே தவிர, அவை இன, மத ரீதியான ஆத்திரமூட்டல்களுக்குக் காரணமாக அமையக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, சம்பந்தப்பட்ட முகநூல் பதிவையும் அதனை வெளியிட்ட கணக்கையும் உடனடியாக விசாரித்து, பதிவுக்குப் பின்னால் இருப்பவர்களை அடையாளம் காண வேண்டும் என்றும், சட்ட மீறல் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாமன்றம் எம்சிஎம்சியைக் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன், மெட்டா நிறுவனத்துடன் தொடர்புகொண்டு சம்பந்தப்பட்ட பதிவை நீக்குவது அல்லது கட்டுப்படுத்துவது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், விசாரணையின் முடிவை அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கவும் வலியுறுத்தியுள்ளது.
கருத்துச் சுதந்திரம் பொறுப்புணர்வுடன் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், இன மற்றும் மத நல்லிணக்கத்தை ஒருபோதும் சமரசம் செய்ய முடியாது என்றும் மாமன்றம் தெரிவித்துள்ளது.
அனைத்து மலேசியர்களின் கண்ணியம், உரிமைகள் மற்றும் பாதுகாப்பைப் பாதுகாப்பதுடன், தேசிய ஒற்றுமையையும் அமைதியான சகவாழ்வையும் நிலைநாட்டுவதில் தொடர்ந்து உறுதியுடன் செயல்படப்போவதாக மாமன்றத் தலைவர் ரிஷிக்குமார் வடிவேலு தெரிவித்துள்ளார்.


