லண்டன், நவ.19 –
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் அசைக்க முடியாத கிளப்பாக மென்செஸ்டர் சிட்டி உருவெடுக்கிறது.சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி 2 – 0 என்ற கோல்களில் லெய்செஸ்டர் சிட்டியை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் மென்செஸ்டர் சிட்டி 34 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. 2011-12 ஆம் பருவத்தில் ரோபேர்டோ மன்சினி நிர்வாகத்தின் கீழ் ஏற்படுத்திய சாதனையை மென்செஸ்டர் சிட்டி சமப்படுத்தியுள்ளது.
இந்த பருவத்தில் இதுவரை நடைபெற்ற 12 ஆட்டங்களில் மென்செஸ்டர் சிட்டி தோல்வியே காணவில்லை என்பது குறிப்பிடதக்கது. மென்செஸ்டர் சிட்டியின் சிறந்த ஆட்டத்தரம் இதர கிளப்புகளுக்கு மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ளது.

முதல் பாதி ஆட்டம் முடிவடையும் தருவாயில் மென்செஸ்டர் சிட்டியின் முதல் கோலை கப்ரியல் ஜீசஸ் போட்டார். இரண்டாம் பாதி ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டியின் இரண்டாவது கோலை கேவின் டி புரூன் போட்டார். இந்த வெற்றியின் மூலம் மென்செஸ்டர் சிட்டி லீக் பட்டியலில் தனது முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது.


