ஜொகூர்பாரு, டிச. 18-
நேற்று இரவில் தாமான் பெலாங்கியில் ஒருவரை கொலை செய்தவனை போலீஸ் கைது செய்துவிட்டதாக சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுவரும் செய்தியை ஜொகூர் போலீஸ் திட்டவட்டமாக மறுத்தது. இது குறித்து ஜொகூர் மாநிலத்தின் குற்றப்புலனாய்வுத் துறையின் தலைவர் டத்தோ அஸ்மான் ஆயூப் கூறுகையில், சம்பந்தப்பட்ட சந்தேகப்பேர்வழியை போலீஸ் கைது செய்துவிட்டதாக கூறப்படும் தகவலில் உண்மையில்லை என தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகின்றது. இதுவரையில் யாரையும் போலீஸ் கைது செய்யவில்லை. இந்த விசாரணையில் ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டிருந்தால் போலீஸ் அவ்வப்போது தெரிவிக்கும். இந்த கொலை சம்பவத்தின் விசாரணைக்கு இடையூறை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய வதந்திகளைப் பரப்புவதை நிறுத்துமாறு போலீஸ் பொதுமக்களைக் கேட்டுக்கொள்வதாக இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றின் வாயிலாக அவர் கூறினார்.
முன்னராக, சம்பந்தப்பட்ட கொலைக்குற்றவாளியைப் போலீஸ் கைது செய்துவிட்டதாக முகநூல், வாட்சாப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களுடன் செய்திகள் பரவின. இவ்விவகாரம் தொடர்பில் டத்தோ அஸ்மான் ஆயூப் இந்த விளக்கத்தை அளித்தார்.
நேற்று தாமான் பெலாங்கி, ஜாலான் ஸ்ரீ பெலாங்கியிலுள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில் சுமார் 30 வயதுதக்க இளைஞரை 4 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தியதோடு காரினால் மோதி தள்ளியது. இரவு மணி 7.30 அளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தின் போது கொலை செய்யப்பட்ட அந்த இளைஞர் 20 வயதுதக்க வெளிநாட்டு பிரஜையான தனது மனைவியுடன் அந்த பெட்ரோல் நிலையத்தில் தனது காரின் டயருக்கு காற்றை செலுத்திக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்திருந்த அக்கும்பல் இந்த வெறிச்செயலை நடத்தியது.


