கோலாலம்பூர், டிச. 18-
மலேசிய தல அஜித் நற்பணி மன்றத்தினர் நாடு தழுவிய நிலையில் பல்வேறு சமூகநல பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் அண்மையில் அந்த மன்றத்தின் ஏற்பாட்டில் ‘‘தல சேரிட்டி கான்வே 2 எனும் வாகன அணிவகுப்பு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் வாயிலாக திரட்டப்பட்ட நிதியில் மலாக்கா, பெம்பானிலுள்ள லாடாங் புக்கிட் காஜாங் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளி புத்தகப் பை உள்பட உபகரண பொருட்கள் வழங்கப்பட்டதோடு பள்ளியின் கட்டடத்தை அழகுப்படுத்த சாயங்கள் வழங்கப்பட்டது. அதோடு, அந்த மன்றத்தின் வாயிலாக அப்பள்ளிக்கு கனிசமான நிதியும் வழங்கப்பட்டது.
இது குறித்து அம்மன்றத்தின் தலைவர் தேவேந்திரன் கூறுகையில், கடந்தாண்டு முதலாவது தல சேரிட்டி கான்வே வாயிலாக நெகிரி செம்பிலானிலுள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது அப்பள்ளியின் நூல்நிலையத்திற்கு நூல்களும் வழங்கப்பட்டன. இம்முறை மலாக்காவிலுள்ள லாடாங் புக்கிட் காஜாங் தமிழ்ப்பள்ளிக்கு உதவிகளை வழங்கினோம். அடுத்த ஆண்டு ஜொகூரிலுள்ள தமிழ்ப்பள்ளிக்கு உதவிகளை வழங்க திட்டமிட்டுள்ளோம்.
இந்த வாகன அணிவகுப்பில் சுமார் 15 கார்களும் 5 மோட்டார் சைக்கிளும் பங்கேற்றது. இந்நிகழ்ச்சியின் முதன்மை ஆதரவாளராக புற்றுநோயாளிகளுக்கு உதவும் இயக்கம் இருந்ததோடு மலாக்கா மாநில மைபிபிபி தலைவர் டத்தோ கில்பர்ட், ம.இ.கா. ஜொகூர் மாநில தலைவர் டத்தோ அசோஜன், மாலிக் ஸ்ட்ரீம்ஸ் உரிமையாளர் டத்தோ மாலிக், இந்து மலையாளி கலை கலாச்சார பாரம்பரிய இயக்கம், தம்ப்ரீட் மோட்டோர்ஸ்போர்ட், ஹோசானா கிரியேஷன்ஸ், ஏஸ் க்ரூ மோட்டோர்ஸ்போர்ட்ஸ், லெகாசி மோட்டோர்ஸ்போர்ட்ஸ், ஆர்.பி.எஸ். வி.ஐ.பி, வி.எஸ்.டி.பிரதர்ஸ், தல ஃபேன் யுனைடெட் முதலானோர் இணை ஆதரவாளராக நிகழ்ச்சிக்கு உதவியுள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்கு மலேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் மன்றம், ஸ்ரீ ராசி பட்டுமாளிகை, புளூஸ் பிரதர்ஸ், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம், கோலாலம்பூர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம், ஏ.ஆர்.ரகுமான் ரசிகர்கள் மன்றம், அனேகன்.கோம் இணையத்தள செய்தி பதிவேடு, தாய்மொழி, சாய் எஃப்.எம், மலேசிய கலையுலகம், இசை எஃப்.எம் முதலானவை ஆதரவு வழங்கியது.
இந்நிகழ்ச்சியினால் திரட்டப்பட்ட நிதியின் வாயிலாக சம்பந்தப்பட்ட தமிழ்ப்பள்ளிக்கு உதவிகளை வழங்க முடிந்தது. இது எங்கள் மன்றத்தின் இவ்வருடத்திற்கான இறுதி நிகழ்ச்சியாகும். தமிழ்ப்பள்ளிகளுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் நாங்கள் மேற்கொண்டுவரும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஆதரவளித்துவரும் அனைத்து தரப்பினர்களுக்கும் எங்கள் மன்றத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம் என தேவேந்திரன் குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில் சுமார் 200க்கும் அதிகமானோர் கலந்துக்கொண்டனர்.








