மெட்ரிட், பிப்.11 –
ஸ்பெயின் லா லீகா போட்டியில் தொடர்ந்து தடுமாற்றம் கண்டு வந்த நடப்பு வெற்றியாளரான ரியல் மெட்ரிட் சனிக்கிழமை நடந்த லீக் ஆட்டத்தில் 5 – 2 என்ற கோல்களில் ரியல் சொசியடாட் அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் ரியல் மெட்ரிட்டின் உச்ச நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ மூன்று கோல்களைப் போட்டு ஹாட்ரீக் சாதனையைப் படைத்தார்.

வரும் புதன்கிழமை ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ணப் போட்டியின் 2 ஆவது சுற்றில் பிரான்சின் பாரிஸ் செயின் ஜெர்மைன் அணியை சந்திக்கவுள்ள ரியல் மெட்ரிட்டுக்கு இந்த வெற்றி புத்துணர்ச்சியை அளித்துளது. சந்தியாகோ பெர்னாபூ அரங்கில் நடந்த ஆட்டத்தில் ரியல் மெட்ரிட்டின் முதல் கோலை முதல் நிமிடத்தில் லுக்காஸ் வாஸ்குவிஸ் போட்டார்.

அதனைத் தொடர்ந்து ரியல் மெட்ரிட் 4 கோல்களைப் போட்டு மிகப் பெரிய வெற்றியை உறுதிச் செய்தது. இதில் ரொனால்டோ, 27, 37, 89 ஆவது நிமிடங்களில் மூன்று கோல்களைப் போட்டு ஹாட்ரீக் சாதனையைப் படைத்தார். இந்த ஆட்டத்தில் ரியல் மெட்ரிட்டின் மற்றொரு கோலை டோனி குரூஸ் போட்டார், கடந்த நான்கு லீக் ஆட்டங்களில் ரியல் மெட்ரிட் மூன்றில் வெற்றி, ஒன்றில் சமநிலை கண்டுள்ளது. அதேவேளையில் 18 கோல்களைப் போட்டுள்ளது.


