சவுத்ஹாம்ப்டன், பிப்.12 –
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆட்டத்தில் லிவர்புல் 2- 0 என்ற கோல்களில் சவுத்ஹாம்ப்டன் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் லிவர்புல் லீக் பட்டியலில் 54 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்துக்கு முன்னேறியது. 2 ஆவது இடத்தில் உள்ள தனது பரம வைரியான மென்செஸ்டர் யுனைடெட்டைக் காட்டிலும் லிவர்புல் இரண்டு புள்ளிகளில் பின் தங்கியுள்ளது.

முதல் பாதி ஆட்டத்தின் 6 ஆவது நிமிடத்தில் ரோபேர்ட்டோ பிர்மின்ஹோ லிவர்புலின் முதல் கோலைப் போட்டார். ஒவ்வோர் ஆட்டத்திலும் முதல் 10 நிமிடங்களில் கோல் போடுவது லிவர்புலின் முக்கிய வழக்கமாகிவிட்டது. இந்த பருவத்தில் 9 ஆவது முறையாக லிவர்புல் முதல் 10 நிமிடங்களில் கோல் பதிவு செய்துள்ளது. முதல் பாதி ஆட்டம் முடிவடைய 3 நிமிடங்கள் எஞ்சியிருந்தபோது முஹமட் சாலா, லிவர்புலின் இரண்டாவது கோலைப் போட்டார்.

அந்த கோலானது இந்த பருவத்தில் பிரீமியர் லீக் போட்டியில் சாலா போட்டிருக்கும் 22 ஆவது கோலாகும். பிரீமியர் லீக் போட்டியில் அதிக கோல்கள் அடித்த ஆட்டக்காரர்கள் பட்டியலில் சாலா, டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பரின் ஹாரி கேனைக் காட்டிலும் ஒரு கோலில் பின் தங்கியுள்ளது.


