வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > வசந்தபிரியாவின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தாதீர்கள்! தந்தை கோரிக்கை
மற்றவைமுதன்மைச் செய்திகள்

வசந்தபிரியாவின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தாதீர்கள்! தந்தை கோரிக்கை

பட்டர்வொர்த், பிப். 12-
ஆசிரியையின் கைப்பேசியைத் திருடியதாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினால் மனமுடைந்து தற்கொலை செய்துக்கொண்ட 13 வயதான இரண்டாம் படிவ மாணவி எம்.வசந்தபிரியாவின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதை நிறுத்தி கொள்ளுமாறு அவரது தந்தை முனியாண்டி ரத்னம் (வயது 54) கோரிக்கை விடுத்தார்.

நிபோங் திபாலிலுள்ள மெதடிஸ்ட் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த வசந்தபிரியா தற்கொலைக்கு முயன்றதைத் தொடர்ந்து சுயநினைவற்ற நிலையில் செபெராங் ஜெயா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆயினும், சிகிச்சை பலனளிக்காததால் கடந்த 1ஆம் தேதி சுயநினைவு திரும்பாமலேயே அவர் மரணமடைந்தார்.

இந்நிலையில் வசந்தபிரியா ஆசிரியையின் கைப்பேசியைத் திருடியதற்கான வீடியோ ஆதாரம் இருப்பதாக நேற்று செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து அவர் இன்று செய்தியாளர்களிடம் இந்த கோரிக்கையை முன்வைத்தார். மேலும், தனது மகள் தன்னுடைய கையின் மணிக்கட்டை அறுத்துக்கொண்டதாக கூறப்படுவதையும் அவரும் அவரது மனைவியுமான மலர்விழி (வயது 51) ஆகிய இருவரும் திட்டவட்டமாக மறுத்தனர்.

வசந்தபிரியாவை நாங்கள் இதற்கு முன்பு மருத்துவமனைக்கு அழைத்து சென்றதில்லை. இது தொடர்பில் மருத்துவமனையின் பதிவு அல்லது போலீஸ் புகாரும் இல்லை. நீங்கள் கிளினிக்குளில் விசாரித்துக்கொள்ளலாம். அவரது உடலில் காயங்களும் ஏற்பட்டிருக்கவில்லை என இன்று கம்போங் தோங் ஹாயிலுள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முனியாண்டி கூறினார்.

முன்னராக வசந்தபிரியாவின் தற்கொலை முயற்சி குறித்து கருத்துரைத்திருந்த துணைக்கல்வியமைச்சர் டத்தோ ப.கமலநாதனின் பேச்சு குறித்து பேசுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார். என் மகளைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும் என்பதை கமலநாதனுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். அவரை நான்தான் வளர்த்து படிக்க வைத்தேன். அவர் இதற்குமுன்பு இதுப்போன்று நடந்துக்கொண்டதில்லை.

மேலும், எங்களின் மனதை மேலும் காயப்படுத்தும் வகையில் பொதுமக்கள் யாரும் கருத்துரைக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். எங்களின் மகளைப் பறிகொடுத்த வேதனையில் நாங்கள் இருக்கின்றோம். ஆசிரியையின் கைப்பேசியை எங்கள் மகள்தான் திருடினார் என்பதற்கு வீடியோ ஆதாரம் இருப்பதாக செய்திகள் வெளியாகியிருப்பது எங்களுக்கு மிகுந்த வேதனையை அளிக்கின்றது.

பள்ளியில் என் மகள் மீது கட்டொழுங்கு பிரச்னைகள் ஏதும் இருந்ததில்லை. அவர் இனம், சமயம் பார்க்காமல் அனைவரிடமும் நன்றாக பழகக்கூடியவர். தன்னிடம் யார் பேசாவிட்டாலும் அவர்களிடம் புன்னகைக்கக்கூடியவர். அவருக்கு பேசுவதற்கு மிக பிடிக்கும். தன்னுடைய கருத்துகளை பரிமாறிக்கொள்வார். மிகவும் அன்பானவர். அவர் மருத்துவராகும் ஆசையில் இருந்தார். அவருக்கு வரைவதிலும் பாடுவதில் ஆர்வம் அதிகம் என முனியாண்டி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன