பெட்டாலிங் ஜெயா, பிப்.22-
நாடு அமைதியாக இருப்பதாலும் பெரும்பாலான போலீஸ் மற்றும் இராணுவ வீரர்கள் தொலைவான பகுதியில் பணிக்கு அமர்த்தப்படத்தேவையில்லை என்பதாலும் அவர்களுக்கான அஞ்சல் வாக்களிப்பு முறையை அரசாங்கம் நிறுத்த வேண்டுமென முன்னாள் இராணுவ வீரர்கள் குழு வலியுறுத்தியது.
பொதுச்சேவை ஊழியர்களுக்கான அஞ்சல் வாக்களிப்பு முறையின் பிரிவுகளை அதிகரிக்கும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை குறித்து தேசிய பெட்ரியோட்டிக் சங்கம் கூறுகையில், அந்நடவடிக்கைக் குறைக்கப்பட வேண்டுமென தெரிவித்தது.
அஞ்சல் வாக்களிப்பு முறையின் வாக்களிப்பதற்கு தகுதி பெற்ற பெரிய குழுவினராக இராணுவ வீரர்கள், போலீஸ் விளங்குகின்றது. அவர்கள் அந்த முறையில் வாக்களிப்பதற்கு தேவையில்லை. எங்கள் காலம் போன்று இப்போது இல்லை. எங்கள் காலத்தில் எதிரி நாடுகளுடன் நாங்கள் போரிட்டதோடு பெரும்பாலான இராணுவ வீரர்கள் காடுகளில் இருந்ததோடு அவசர சூழ்நிலையை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருந்தனர். ஆனால், இப்போது நாம் அமைதியான சூழ்நிலையில் இருக்கின்றோம். இராணுவ வீரர்களும் இராணுவ தளத்தில் இருப்பதாக அந்த சங்கத்தின் தலைவரான பிரிக் ஜென் (பி) முஹம்மட் அர்ஷாட் ராஜி தமது அறிக்கையின் வாயிலாக கூறினார்.
சரியான தினசரி கடமை அட்டவணை வாயிலாக தேர்தல் நாளில் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தவர்கள் மிக எளிதில் வாக்களிக்க முடியும். அதேப்போன்று முறையான நிர்வாகத்தின் வாயிலாக இதர பொதுச்சேவை துறைகளான குடிநுழைவு, சுங்கத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, சிறைத்துறை மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் தேர்தல் நாளில் வாக்களிக்க முடியும்.
இந்த அஞ்சல் வாக்களிப்பு முறையிலான வாய்ப்பு நாட்டிற்காக கடமையில் இருப்பவர்கள் குறிப்பாக ஒரு நாளில் தளத்திற்கு வர முடியாத கடல் பிரிவு ரோந்து போலீசார் முதலானோருக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும்.
அதேவேளையில், அஞ்சல் வாக்களிப்பு முறையை சீரமைத்தல் அல்லது தடை செய்ய வலியுறுத்தும் பெர்சே 2.0 இயக்கத்திற்கு ஆதரவளிப்பதாகவும் அவர் கூறினார்.


