புத்ராஜெயாவில், ஏப்.10 –

14 ஆவது பொதுத் தேர்தலுக்கான தேதியை இன்று புத்ராஜெயாவில் அறிவித்த தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஹஷிம் அப்துல்லா, செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்விகளைத் தவிர்த்துள்ளார். நாடே எதிர்பார்த்திருந்த தேதிகளை அறிவித்த ஹஷிம் அப்துல்லா அதன் பின்னர் தேர்தல் அதிகாரிகளிடம் நியமனக் கடிதங்களை மட்டுமே வழங்கினார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் நிருபர்கள் கேள்வி கேட்பதற்காக நிருபர்கள் டான்ஸ்ரீ, டான்ஸ்ரீ என முழக்கமிட்டாலும் அதனைப் பொருட்படுத்தாமல் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் இருந்து வெளியேறினார். 14 ஆவது பொதுத் தேர்தலை மே 9 ஆம் தேதி, அதாவது வார நாளில் நடத்துவதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ள செய்தியாளர்கள் ஆர்வமுடன் இருந்தனர்.

எனினும் எந்த ஒரு கேள்விக்கும் அவர் பதில் அளிக்காமல் அங்கிருந்து வெளியேறியது, செய்தியாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த டான்ஸ்ரீ ஹஷிம் அப்துல்லா, இதன் பின்னர் பெரும்பாலும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதைக் காட்டிலும் அதற்கு பத்திரிக்கை அறிக்கைகளை மட்டுமே அனுப்ப போவதாக தெரிவித்திருந்தார்.

மே 9 ஆம் தேதி தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு குறித்து அறிந்து கொள்ள, பல்வேறு ஊடகங்கள் டான்ஸ்ரீ ஹஷிம்மை தொடர்ந்து தொடர்பு கொண்டு வருவதாக கூறப்படுகிறது.