கோலாலம்பூர், ஏப்.10 –

14 ஆவது பொதுத் தேர்தலை வார நாளில் நடத்தும் தேர்தல் ஆணையத்தின் முடிவை பாக்காத்தான் ஹராப்பான்  கேள்வி எழுப்பத் தேவையில்லை என தேசிய முன்னணி வியூகத் தொடர்பு துணை இயக்குனர் டத்தோ எரிக் சீ தோ தெரிவித்துள்ளார். துன் டாக்டர் மகாதீர் பிரதமராக பதவியேற்றப் பின்னர் சந்தித்த முதல் தேர்தல் 1982 ஆம் ஆண்டில் ஏப்ரல் 22 ஆம் தேதி ( வியாழக்கிழமை ) நடத்தப்பட்டதை எரிக் சுட்டி காட்டினார்.

அதேவேளையில் 1995, 1999 ஆம் ஆண்டுகளில் பொதுத் தேர்தல் திங்கள், செவ்வாய்கிழமைகளில் நடைபெற்றிருப்பதாகவும் அவர் கூறினார். எனவே வார நாளில் பொதுத் தேர்தலை நடத்துவது புதிது அல்ல என்பதை எதிர்கட்சி ஆதரவாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என எரிக் சீ தோ தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் தாம் தேர்தல் ஆணையத்திற்கு ஆதரவாக பேசவில்லை என அவர் சொன்னார். ஆனால் வார இறுதியில் வாக்களிப்பை நடத்துவது அனைத்து மாநிலங்களுக்கும் சாதகமான சூழலை ஏற்படுத்தும் என சொல்ல முடியாது என அவர் மேலும் சொன்னார். திரெங்கானு, கெடா, கிளந்தான் ஆகிய மாநிலங்களில் சனிக்கிழமை வார இறுதி விடுமுறை நாளாகும்.

அதேவேளையில் ஜோகூர் மாநிலத்திலும் வெள்ளி, சனிக்கிழமைகளில் விடுமுறை அனுசரிக்கப்படுக்கிறது. ஒருவேளை தேர்தல் ஞாயிற்றுக்கிழமையில் நடத்தப்பட்டால் அந்த மாநிலங்களுக்கு சாதகமாக இருக்காது என அவர் சொன்னார்.  அமெரிக்க அதிபர் தேர்தல் கூட, 2016 ஆம் ஆண்டில் நவம்பர் 8 ஆம் தேதி செவ்வாய்கிழமை நடைபெற்றிருப்பதை எரிக் சி தோ சுட்டி காட்டினார்.