3ஆவது தமிழ் வானொலி உருவாக நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவு! ஃபங்கி சங்கர் அறிவிப்பு

0
3

கோலாலம்பூர், ஏப்.11-

நாட்டில் மூன்றாவது தமிழ் வானொலியை உருவாக்கும் முயற்சியில் அதற்கான உரிமத்தைப் பெற வேண்டி 17 ஆண்டுகள் காத்திருந்தேன். ஆனால், இன்று வரையில் ஒரு கலைஞனான என்னை பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் உள்பட பல்வேறு தரப்பினர்கள் புறக்கணித்து விட்டனர். ஆகையால், வரும் 14ஆவது பொதுத்தேர்தலில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தலைமையிலான நம்பிக்கை கூட்டணிக்கு இசை எஃப்.எம். ஆதரவு தெரிவிப்பதாக அதன் தோற்றுநரும் தலைமை செயல்முறை அதிகாரியுமான ஃபங்கி சங்கர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், இந்த 17 வருடங்கள் மூன்றாவது தமிழ் வானொலியை அமைப்பதற்கு பல்வேறு தலைவர்களிடம் அதற்கான மனுக்கள் கொடுத்து நேரம்தான் வீணானது. என்னுடைய மனுக்களை அவர்கள் யாரும் பரிசீலணை செய்ததாக தெரியவில்லை. அண்மையில், கூட செலாயாங்கில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிடம் மனுவைக் கொடுக்க முயன்றோம். ஆனால், அவர் அதை உதாசீனப்படுத்தி விட்டார்.

எனது நோக்கம் மூன்றாவது தமிழ் வானொலியை அமைத்து அதன் வருமானத்தில் 30 விழுக்காடு கலைஞர்களின் திறன் மேம்பாடு, மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு நிதியுதவி, வீடு இல்லாதவர்களுக்கு உதவி, வசதி குறைந்தவர்களுக்கு மருத்துவ உதவி முதலான சமூகநல உதவிகளை வழங்க திட்டுமிட்டுள்ளோம். ஆயினும், எங்களின் கோரிக்கைக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை.

நாட்டில் 68 வானொலி நிலையங்கள் உள்ளன. அதில், டி.எச்.ஆர். ராகா தனியார் வானொலி நிறுவனமாக உள்ளதோடு இப்பொழுதுதான் 24 மணி நேர சேவையை வழங்குகின்றது. அதுவும் மூன்றாவது தமிழ் வானொலிக்காக நான் குரல் கொடுத்த பிறகுதான் அது முழு நேர சேவையை வழங்குகின்றது. அது நல்லதுதான். பாராட்டுகின்றேன்.

ஆனால், சுமார் 24 ஆங்கில வானொலிகள் இருக்கின்றன. நாட்டில் அத்தனை ஆங்கில வானொலிகளையும் மக்கள் கேட்கிறார்களா? ஐ எம் ஃபோர் யூ எனும் வானொலி உள்ளது. அதை எத்தனை பேர் கேட்கிறார்கள்? அதனை எங்களுக்கு வழங்கும்படி கேட்டும் இதுவரையில் பதில் இல்லை.

இந்நிலையில் புதிய தலைமுறைக் கட்சியின் (நியூஜென்) தோற்றுநர் கோபிகிருஷ்ணன் எனது முகநூல் பதிவைப் பார்த்து எனக்கு உதவி புரிய வந்தார். அவர் என்னை துன் மகாதீரை சந்திக்க வைத்து மூன்றாவது தமிழ் வானொலிக்கான எங்களுடைய பரிந்துரையைக் கொடுக்க வைத்தார். அவரும் அதனை பரிசீலனை செய்வதாக கூறியுள்ளார்.

எனக்கு மரியாதை அளித்த மகாதீருக்கு ஆதரவளிக்க முடிவெடுத்து விட்டேன். வரும் பொதுத்தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியமைத்தால் சபா, சரவாக் உள்பட மலேசியா முழுவதும் இயங்கக்கூடிய மூன்றாவது தமிழ் வானொலிக்கான அனுமதியை வழங்குவதாக துன் மகாதீர் உறுதி கடிதம் வழங்க வேண்டுமென கேட்டிருக்கின்றோம். இதற்கான பொறுப்பை கோபிகிருஷ்ணன் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்த உறுதி கடிதம் கிடைத்தால் இசை எஃப்.எம். சார்பில் நாங்கள் நாடு தழுவிய நிலையில் நம்பிக்கைக் கூட்டணியின் வெற்றிக்காக ஆதரவு திரட்டுவோம். எனது நோக்கம் மூன்றாவது தமிழ் வானொலியை அமைப்பதுதான். இது அமைந்த பிறகு அதில் வரும் வருமானத்தில் 30 விழுக்காட்டை மக்கள் நலனுக்காக அரசு சார்பற்ற இயக்கங்களின் வாயிலாக உதவி செய்து வரலாற்றில் இடம் பிடிப்போம். முடியாதது என்று எதுவும் இல்லை. இது சாத்தியமானால் நாட்டில் உள்ளூர் கலைஞர்களுக்கான முழு நேர தமிழ் அலைவரிசையும் உருவாகும். ஆகையால், எங்களுக்கு பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும். வரும் பொதுத்தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணியை வெற்றிப்பெற செய்ய வேண்டுமென ஃபங்கி சங்கர் கேட்டுக்கொண்டார்.