கோலாலம்பூர், ஏப். 15-

ஆலயங்களை சமூக உருமாற்று மையங்களாக மாற்றும் முன்னோடி திட்டத்திற்கு மகத்தான ஆதரவு கிடைத்து வருவதாக பிரதமர்துறையின் கீழ் செயல்படும் செடிக்கின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டத்தோ என்.எஸ்.ராஜேந்திரன் தெரிவித்தார்.

கடந்தாண்டு தொடங்கப்பட்ட இந்த முன்னோடி திட்டத்தின் கீழ் இது வரையில் நாடு தழுவிய நிலையில் 6 ஆலயங்கள் தேர்தெடுக்கப்பட்டு பல்வேறு சமூகநல நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுங்கைப் பட்டாணி, லாடாங் பெர்பாடானானிலுள்ள ஶ்ரீ ருத்ர வீரகாளியம்மன் ஆலயம், பினாங்கில் பிராய், ஜாலான் பாருவிலுள்ள ஶ்ரீ முனீஸ்வரர் ஆலயம், பேராக்கில் கோலகங்சாரிலுள்ள ஶ்ரீ கணேசர் ஆலயம், சிலாங்கூரில் பெஸ்தாரி ஜெயாவிலுள்ள ஶ்ரீ தண்டாயுதபாணி ஆலயம், ஜொகூரில் மாசாயிலுள்ள ஶ்ரீ சுப்ரமணியர் ஆலயம் முதலானவற்றில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

சுமார் 4 பிரிவுகளின் கீழ் இந்த ஆலயங்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆரம்பப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் மற்றும் சமய வகுப்புகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன. வசதி குறைந்த மாணவர்களுக்கு இதில் முக்கியத்துவம் வழங்கப்படுவதோடு அவர்களுக்கான போக்குவரத்து செலவுகளை நாங்களே ஏற்றுக்கொண்டிருப்பதோடு உணவுகளையும் வழங்குகின்றோம்.

அடுத்ததாக, இந்திய பெண்களை குறிப்பாக தனித்துவாழும் தாய்மார்களுக்கு கூடுதல் வருமானத்தை ஏற்படுத்தி தரும் வகையில் தையல், பூ கட்டுதல், முக  ஒப்பனை முதலான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்த பயிற்சிகளை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படுவதோடு அவர்களின் அடுத்தக்கட்டமாக அவர்களுக்கு வர்த்தக வாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் அமானா இக்தியார் போன்றவற்றில் கடனுதவியும் பெற்றுத்தரப்படும்.

தொடர்ந்து, இந்திய இளைஞர்களை ஆலயங்கள் பக்கம் கவர்ந்திழுக்கும் வகையில் அவர்களுக்கு கபடி போன்ற பாரம்பரிய விளையாட்டு போட்டிகளையும் நடத்துகின்றோம். அவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கும் சமய வகுப்புகளை நடத்துக்கின்றோம். ஒவ்வொரு ஆலயங்களுக்கு குறிப்பிட்ட நிதிகளை நாங்கள் வழங்கியிருக்கின்றோம். சம்பந்தப்பட்ட ஆலயங்கள் இந்த நிதிகளை ஆலய வழிபாட்டிற்கு பயன்படுத்த முடியாது. அவர்கள் இத்தகைய சமூகநல பயிற்சிகளுக்கு நிதிகளைப் பயன்படுத்துவதை நாங்களும் இத்திட்ட்த்திற்கு ஆதரவு அளித்துவரும் மலேசிய இந்து சங்கமும் கண்காணித்து வருவதாக பேராசிரியர் ராஜேந்திரன் குறிப்பிட்டார்.

இது வரையில் இந்த 6 ஆலயங்களில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பல்வேறு பயன்களைப் பெற்று வருகின்றனர். இந்த முன்னோடி திட்டத்தில் கிடைத்த ஆக்கக்கரமான வெற்றியைத் தொடர்ந்து இவ்வாண்டு அதனை சீக்கிய சமூகத்தினரின் குட்வாரா ஆலயம், கிருஸ்துவர்களின் தேவாலயம், இந்திய முஸ்லிம்களின் பள்ளிவாசல் ஆகியவற்றிலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம் என அவர் கூறினார்.

இதனிடையே, வருகின்ற 28ஆம் தேதி பினாங்கில் பிராய், ஜாலான் பாருவிலுள்ள ஶ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் இந்த சமூக உருமாற்றுத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ தொடக்கவிழா நடைபெறவுள்ளது. இதில், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணையமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் கலந்துக்கொள்ளவிருப்பதாக பேராசிரியர் டத்தோ என்.எஸ்.ராஜேந்திரன் குறிப்பிட்டார்.