ரெம்பாவ், ஏப். 15-

வருகின்ற 14ஆவது பொதுத்தேர்தலில் அம்னோ மற்றும் தேசிய முன்னணியின் இளைஞர் பிரிவு தலைவரான கைரி ஜமாலுடின் தற்போது இருக்கும் ரெம்பாவ் நாடாளுமன்ற தொகுதியைத் தற்காக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இரண்டு தவணைகள் அந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் தம்மிடம் தேசிய முன்னணியின் தலைவரான டத்தோஶ்ரீ நஜீப் துன் ரசாக் இது குறித்து வினவியிருப்பதை ஒப்புக்கொண்ட அவர், அந்த தொகுதியிலேயே நீடிக்க விரும்புவதாக கூறியுள்ளார்.

வேறு தொகுதிகளுக்கு நான் செல்வதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கட்சியின் உத்தரவிற்கு தாம் கட்டுப்பட விரும்புவதால் இவ்விவகாரத்தை தேசிய முன்னணியின் தலைவரிடமே விட்டு விடுகின்றேன். ஆனால், எனது தேர்வு குறித்து என்னிடம் கேட்டால் ரெம்பாவ் தொகுதியில்தான் நீடிக்க விரும்புவதாக கூறுவேன் என கைரி குறிப்பிட்டார்.

ரெம்பாவ் தொகுதி தேசிய முன்னணியின் கோட்டையாக கருதப்பட்டாலும் நான் இந்த தொகுதியிலுள்ள மேம்பாட்டை அதிகம் காண்கின்றேன். இங்கு மக்கள் பிரதிநிதியாக நான் வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. இங்குள்ள மக்களுக்கு இன்னும் அதிக சேவையை வழங்க விரும்புகின்றேன் என இன்று மக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போது செய்தியாளர்களைச் சந்தித்த போது கைரி கூறினார்.

தேசிய முன்னணி தரமான வேட்பாளர்களைக் கொண்டிருப்பதால் அரசாங்கத்தை வழிநடத்துவதற்கான அதிகாரத்தை மக்கள் அக்கூட்டணிக்கு வழங்குவார்கள் என தாம் நம்புவதாக கூறிய அவர், நடப்பு விவகாரங்கள் உள்பட சில விவகாரங்கள் பிரச்னைகளை ஏற்படுத்தினாலும் ரெம்பாவில் அப்பிரச்னைகளுக்கு தன்னால் தீர்வு காண முடியும் என்றும் வாக்காளர்கள் உணர்ச்சிவசப்பட்டு தவறான முடிவை எடுத்துவிடக்கூடாது. பிறகு,மேம்பாட்டை நம்மால் அடைய முடியாது என கைரி சொன்னார்.

கடந்த 12ஆவது பொதுத்தேர்தலில் ரெம்பாவ் நாடாளுமன்றத்தில் முதல்முறையாக போட்டியிட்ட கைரி பி.கே.ஆர். வேட்பாளர் பட்ருல் ஹிஷாம் ஷாஹாரின்னை 5,746 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அதன் பின்னர், 13ஆவது பொதுத்தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்ட கைரி பி.கே.ஆரின் ரட்சாலி அப்துல் கனி, சுயேட்சை வேட்பாளர் அப்துல் அசிஸ் ஹாசான் ஆகியோரை 18,357 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.