கோலாலம்பூர், ஆக.1-
கெட்கோ நிலத்தில் ரப்பர் மரங்களை ஏற்றும் எங்களது வேலைக்கு கெட்கோ குடியிருப்பாளர்கள் இடையூறு ஏற்படுத்தியதாகவும் நிலத்தை சேதப்படுத்தியதாகவும் கூறி தனியார் நிறுவனம் இழப்பீடு கேட்டு கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கைத் தொடுத்துள்ளது.
இது குறித்து 140 கெட்கோ குடியிருப்பாளர்களின் தரப்பு வழக்கறிஞரான ஆர்.கங்காதரன் கூறுகையில், இழப்பீட்டின் மதிப்பு மீதான முதல் வாசிப்பை நீதிமன்றம் செப்டம்பர் மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நிர்ணயித்துள்ளதாக கூறினார்.
சம்பந்தப்பட்ட பகுதிக்குள் அந்நிறுவனம் நுழைவதற்கு அங்குள்ள குடியிருப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு அவர்களின் வேலைக்கு இடையூறு ஏற்படுத்தியதால் இழப்பீடு கேட்டு அந்நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது.
இவ்வழக்கில் செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி இரண்டு தரப்பும் தங்களின் சாட்சிகளின் அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கெட்கோ நில விவகாரம் தொடர்பில் அக்குடியிருப்பாளர்கள் கடந்த 2013ஆம் ஆண்டு கே.ஜெயபாலசிங்கம், யோங் யூன் ஷிங் மற்றும் தனியார் நிறுவனம் ஆகியவற்றின் மீது சட்டநடவடிக்கையை எடுத்துள்ளனர்.
கடந்த 1977ஆம் ஆண்டு நெகிரி செம்பிலான் அரசாங்கம் மாநில பொருளாதார மேம்பாடு வாரியம் வாயிலாக அந்நிலத்தை கெட்கோவிடம் அடகு வைத்தது. அதன் பின்னர், கெட்கோவை வைத்திருந்த தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம் (என்.யூ.பி.டபுள்யூ) தங்களின் உறுப்பினர்களுக்காக அந்நிலத்தை நில திட்டத்திற்கு உட்படுத்தியது. அதாவது, அந்நிலத்தில் அவர்கள் தங்களின் வேலையை செய்வதற்கு முன்னர் முன்பணமாக 7,600 வெள்ளியை கட்டணமாக செலுத்தினர்.
ஆயினும், இந்த நில திட்டம் இறுதியில் தோல்வி கண்டதோடு கெட்கோ இரண்டு நிதி நிறுவனங்களிடமிருந்து கடனுதவியை பெற்றது. 1996ஆம் ஆண்டு கெட்கோ திவாலாக அறிவிக்கப்பட்டதோடு அந்நிலத்தை 2006ஆம் ஆண்டு நடப்பிலுள்ள தனியார் நிறுவனம் வாங்கியது. அதன் பிறகு, அந்நிறுவனம் அங்குள்ள குடியிருப்பாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டது. இதனை எதிர்த்து அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். ஆயினும், இவ்வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இத்தீர்ப்பை எதிர்த்து குடியிருப்பாளர்கள் மேல்முறையீடு செய்தனர். அவ்வழக்கிலும் தனியார் நிறுவனத்திற்கு சாதகமாகவே தீர்ப்பு அமைந்தது.
கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் 8 அம்சங்கள் கெட்கோ குடியிருப்பாளர்களுக்கு சார்பாகவும் 2 அம்சங்கள் தனியார் நிறுவனத்திற்கும் சார்பாகவும் வழங்கப்பட்டது. ஆயினும், கடந்த நவம்பர் மாதம் அக்குடியிருப்பாளர்கள் உயர்நீதிமன்றம் தனியார் நிறுவனத்திற்கு சார்பாக வழங்கிய இரண்டு அம்சங்கள் குறித்து மேல்முறையீடு செய்தது.
இந்நிலையில், கெட்கோ குடியிருப்பாளர்களின் மேல்முறையீடு வழக்கு வருகின்ற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் செவிமடுக்கவிருப்பதாக கங்காதரன் கூறினார்.


