திங்கட்கிழமை, ஜனவரி 20, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > ம.இ.காவிற்கு ஆதரவளிக்க மாட்டோம். ஆனால்…
முதன்மைச் செய்திகள்

ம.இ.காவிற்கு ஆதரவளிக்க மாட்டோம். ஆனால்…

காப்பார், ஆக.1-
ம.இ.காவுடன் இணைந்து செயல்படுவதற்கு ஐ.பி.எப். கட்சி ஒருபோதும் இடமளிக்காது என அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ எம்.சம்பந்தன் தெரிவித்தார்.

மறைந்த ஐ.பி.எப். கட்சியின் தோற்றுநரும் முன்னாள் தலைவருமான டான்ஸ்ரீ எம்.ஜி.பண்டிதனின் இலக்கு என்னவென்றால் தேசிய முன்னணியில் ஐ.பி.எப். ஒரு உறுப்பு கட்சியாக இடம்பெற்று சிலாங்கூர் மாநிலத்தை எதிர்கட்சிகளிடமிருந்து கைப்பற்ற பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்பதாகும் என அண்மையில் கிள்ளான் உத்தாமாவில் நடைபெற்ற ஐ.பி.எப். காப்பார் தொகுதியின் பேராளர் மாநாட்டை தொடக்கி வைத்து பேசிய போது அவர் கூறினார்.

ம.இ.காவிற்கு ஐ.பி.எப். கட்சி ஒரு போதும் ஆதரவு அளிக்காது. ஆனால், வருகின்ற 14ஆவது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர்களாக நிறுத்தும் எவரையும் முழுமையாக ஆதரிக்கும். குறிப்பாக, தற்போது எதிர்கட்சியின் வசம் இருக்கும் காப்பார் நாடாளுமன்ற தொகுதியை தேசிய முன்னணி கைப்பற்ற ஐ.பி.எப். தொகுதி பாடுபடும். தேசிய முன்னணியின் வெற்றிக்கு ஐ.பி.எப் 110 விழுக்காடு ஆதரவை வழங்கும்.

காப்பார் தொகுதி எதிர்கட்சிகளின் பலம் வாய்ந்த கோட்டை என எங்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எப். காப்பார் தொகுதி தேசிய முன்னணியின் உறுப்பு கட்சிகளின் அனைத்து வேட்பாளர்களுக்கும் வற்றாத ஆதரவை வழங்கும். காப்பார் தொகுதியை வெல்வது எளிதான காரியம் இல்லை என்றாலும் காப்பார் ஐ.பி.எப் தொகுதி மக்களின் பலம் என்னவென்பதை காட்டி வருகின்ற பொதுத்தேர்தலில் தேசிய முன்னணியை வெற்றி பெற செய்ய வேண்டும்.

இந்நாட்டிலுள்ள இந்தியர்களின் மிக பெரிய எதிர்பார்ப்பாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் விளங்குகிறார். முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் ஐ.பி.எப் கட்சியை கண்டு கொண்டதில்லை. ஆனால், நஜீப் இந்திய சமுதாயத்தின் மீது அக்கறையை கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக டத்தோ சம்பந்தன் குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன