ரோம், மே.15 –
மென்செஸ்டர் சிட்டி, இண்டர் மிலான் கால்பந்து கிளப்புகளின் முன்னாள் நிர்வாகி ரோபேர்ட்டோ மன்சினி, இத்தாலி கால்பந்து அணியின் பயிற்றுனர் ஏற்றுள்ளார். 1958 ஆம் ஆண்டுக்குப் பிறகு, முதல் முறையாக உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கு தேர்வுப் பெறுவதில் இத்தாலி தோல்வி கண்டதை அடுத்து , கியான்பியோரோ வென்டூரா பயிற்றுனர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனையடுத்து இத்தாலியின் புதிய பயிற்றுனராக ரோபேர்ட்டோ மன்சினி நியமிக்கப்பட்டுள்ளார். ரஷ்யாவின் செனிட் செயின் பீட்டர்ஸ்பெக் நிர்வாகியாக செயல்பட்ட மன்சினி உடனடியாக தனது மூன்று ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து, இத்தாலியின் ரோமுக்கு பயணமானார். 2020 ஆம் ஆண்டில் ஐரோப்பிய கிண்ண கால்பந்துப் போட்டிக்கு இத்தாலியை தகுதிப் பெற செய்யும் பொறுப்பை மன்சினி ஏற்றுள்ளார்.
வரும் மே 28 ஆம் தேதி, நட்புமுறை ஆட்டத்தில் இத்தாலி அணி சவூதி அரேபியாவை சந்திக்கவுள்ளது. அந்த ஆட்டத்தில் இத்தாலி அணியை மன்சினி முதல் முறையாக வழி நடத்தவுள்ளார். இத்தாலி கால்பந்து அணியின் பயிற்றுனர் பொறுப்பை ஏற்க,மன்சினி மிகுந்த ஆர்வத்தைக் காட்டியதாக இத்தாலி கால்பந்து ஆணையர் ரோபேர்ட்டோ பஃப்ரிசினி தெரிவித்தார்.
2002 ஆம் ஆண்டில் மென்செஸ்டர் சிட்டி , இங்கிலீஷ் பிரீமியர் லீக் கிண்ணத்தை வெல்ல துணைப் புரிந்த மன்சினி, இண்டர் மிலான் அணியுடன் மூன்று இத்தாலி சிரி ஆ லீக் பட்டங்களை வென்றுள்ளார்.


